அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது.. புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது.. போட்டுத்தாக்கும் செந்தில் பாலாஜி!

By Asianet TamilFirst Published May 23, 2022, 10:05 PM IST
Highlights

“பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு வரி, மத்திய, மாநில விகிதாச்சார வரி என்று உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு விகிதாச்சார வரியைத்தான் மத்திய அரசு குறைத்துள்ளது."
 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மாநிலத்துக்கு 55 சதவீத வரி குறைந்துள்ளது. அதை மறைத்தும், மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்  என்று தமிழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த வேளையில் அதன் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, ‘இதுவரை பெட்ரோல், டீசல் விலையை இதுவரை குறைக்காத மாநில அரசுகள் குறைக்க முன் வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். மேலும் 72 மணி நேரத்தில் பெட்ரோல். டீசல் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடாவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும் அண்ணமலை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கரூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அண்ணாமலையின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு வரி, மத்திய, மாநில விகிதாச்சார வரி என்று உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு விகிதாச்சார வரியைத்தான் மத்திய அரசு குறைத்துள்ளது.

இதிலேயே மாநிலத்துக்கு 55 சதவீத வரி குறைந்துள்ளது. அதை மறைத்தும், மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் கிடையாது. புரிந்து கொள்ளும் பக்குவமும் கிடையாது. அதனால் தவறான பொய்த் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.” என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜி கூறுகையில், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 75 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.7.88 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இலவச மின் இணைப்புக்கு காத்திருந்த 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.

click me!