
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இழுபறியில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் வெளியாகவில்லை. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதாவது, திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோன்று, மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் பலம் குறைந்து, திமுகவின் பலம் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், அதிமுகவிடம் உள்ள 3 இடங்களில் ஒன்று திமுகவின் வசம் செல்கிறது. இதனால், திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும். இந்நிலையில், திமுக தன்னிடம் உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த 15ம் தேதியே திமுக அறிவித்தது. அதன்படி, திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை, 3 இடங்கள் 2ஆக குறைந்துள்ள நிலையில், அதை கைப்பற்றும் முயற்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன், மதுரை முன்னாள் துணை மேயரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதே போல், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் கட்சியில் தங்களின் செயல்பாடுகளை தெரிவித்து இபிஎஸ்க்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.மேலும் பா.வளர்மதி,கோகுல இந்திரா,செம்மலை ஆகியோரும் இந்த ரேஸில் முந்துதுவதாலும், இவ்வாறு இரு தலைமைகளும் தங்களது ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்க நினைப்பதாலும் வேட்பாளர் தேர்வில் போட்டா போட்டி நிலவி வருகிறது.
இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !