பேரறிவாளனுக்கு குற்றத்தில் எந்த தொடர்பும் இல்லை.. திட்டவட்டமாக கூறும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published May 23, 2022, 9:39 PM IST
Highlights

“எனது மூத்த சகோதரனாக இருந்து, தொடர்ந்து குடும்பத்தில் ஒருவராக உளப்பூர்வமுடன் ஆறுதலாய் நின்றவர் அண்ணன் திருமாவளவன்” என்று பேரறிவாளன் கூறினார். 

உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவம் தீர்ப்பை படித்துப் பார்த்தால் யாரும் பேரறிவாளனை குற்றவாளி என்று கூற மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை 142வது சட்ட விதியைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து முறைப்படி விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன். இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து திரும்பிய விசிக தலைவர் தொல். திருமாவளவனை பேரறிவாளனும் அவருடைய தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்தனர்.

திருமாவளவனுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது பேரறிவாளனுக்கு திருமாவளவன், புத்தர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதனையடுத்து திருமாவளன், பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அற்புதம்மாள் கூறுகையில்,  “என்னுடைய மகன் விடுதலைக்கு துணையாக தொல். திருமாவளவன் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கவே நேரில் சந்தித்தோம்” என்றார். பின்னர் பேசிய பேரறிவாளன், “எனது மூத்த சகோதரனாக இருந்து, தொடர்ந்து குடும்பத்தில் ஒருவராக உளப்பூர்வமுடன் ஆறுதலாய் நின்றவர் அண்ணன் திருமாவளவன்” என்று பேரறிவாளன் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், “பேரறிவாளன் விடுதலை பெற்றுள்ளது மன நிம்மதியை அளிக்கிறது. கட்சி, மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கும் இந்தக் குற்றத்துக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என விசாரிக்கும் போதே தெரிய வந்தது. பேரறிவாளன் விடுதலையில் தமிழக அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நடத்தும் போராட்டம் மூலம், அதன் கடமையை அக்கட்சி செய்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவம் தீர்ப்பை படித்துப் பார்த்தால் யாரும் பேரறிவாளனை குற்றவாளி என்று கூற மாட்டார்கள்” எனத் திருமாவளவன் தெரிவித்தார்.
 
 

click me!