
தமிழகத்தில் மணல் கடத்தல்
தமிழகத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தடுத்த விஏஓ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்த முற்பட்டவர்களை தடுத்த வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் திரு. பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான மணி, தனபால் ஆகியோர் கல்லைக் கொண்டு கடுமையாகத் தாக்கி, கொல்ல முயன்றுள்ளனர்.
திமுக நிர்வாகி தாக்குதல்
பொதுமக்களால் மீட்கப்பட்ட திரு. பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொல்லப்படுவதும், கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக இருக்கிறது திமுக அரசு. மணல் கொள்ளையில் ஈடுபடும் திமுகவினரை, கட்சியிலிருந்து நீக்குவதாகக் கண்துடைப்பு நாடகமாடி விட்டு, ஓரிரு மாதங்களில் பின் வாசல் வழியாக மீண்டும் கட்சியில் இணைத்து சட்டம் ஒழுங்கை கேலிக்குள்ளாக்குகிறது திமுக.
சட்டம் ஒழுங்கை கேலிக்குள்ளாக்கும் திமுக
மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டியதும், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் தமிழக அரசின் கடமை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
திருச்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கடித்து கொல்ல முயற்சி - காவல்துறை விசாரணை