
புதிய கல்விக் கொள்கை மூலம் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் தொடர்ந்து படிக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் இட ஒதுக்கீடு இல்லை என்றால் அண்ணாமலை கூட ஐபிஎஸ் ஆகி இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரூரில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தொடங்கியுள்ள நீட், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது, நுழைவுத்தேர்வு மூலம் மனுதர்ம கல்வியை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
பெண்களுக்கு விடுதலை என்பது திராவிட இயக்கம் கொடுத்த கொடை சமூக நீதி என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதே ஆகும். கல்வி, உடல்நலம் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. உலக அளவில் அறிஞர்கள் ஆராய்ந்து சொன்னது தான் திராவிட மாடல். இதைத் தெரிந்து கொள்ள பெரியாரை படிக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை என்பது 73 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி. எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே கல்விக் கொள்கை. ஆனால் சிலர் படிக்க வேண்டும் என்பது மனுதர்மம். இட ஒதுக்கீடு இல்லை என்றால் அண்ணாமலை கூட ஐபிஎஸ் ஆகி இருக்க முடியாது.
3,5, 8, 10 ஆகிய தேர்வுக்கு பொது தேர்வு, இட ஒதுக்கீடு கிடையாது கல்விக்கான உதவித்தொகை கிடையாது இதுதான் புதிய கல்விக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை மூலம் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் தொடர்ந்து படிக்க முடியாது. அவர்கள் பெற்றோர்களுக்கு உதவி செய்ய வேண்டும் இதுதான் அன்று குலக்கல்வி திட்டம். நுழைவுத் தேர்வு கொண்டு வந்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோச்சிங் சென்டர்களை தொடங்குவார்கள். ஏழைக்கு கல்வி கிடைக்காது மத்திய அரசு தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதி, ஜிஎஸ்டி தொகையை திரும்பி வழங்காதது உள்ளிட்ட வகைகளில் மாநில அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை கடைபிடிக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.