பதற்றத்தை ஏற்படுத்தி ஒரு சக்தியாக உருப்பெற கணக்கு போடுகிறார்கள்.. பாஜக மீது திருமாவளவன் அடுக்கடுக்காக புகார்!

Published : Apr 20, 2022, 09:21 PM IST
பதற்றத்தை ஏற்படுத்தி ஒரு சக்தியாக உருப்பெற கணக்கு போடுகிறார்கள்.. பாஜக மீது திருமாவளவன் அடுக்கடுக்காக புகார்!

சுருக்கம்

பாஜகவைச் சார்ந்தவர்கள் இங்கு திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது. திமுக அரசின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

பாஜகவைச் சார்ந்தவர்கள் இங்கு திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மீது கொடிக் கம்பு வீச்சு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

திருமாவளவன் கண்டனம்

ஆளுநர் வானகத்தின் மீது கொடி கம்பு வீசி நடந்த இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து  தெரிவித்திருந்தார். ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதலுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்து அரியலூரில் நேற்று பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் பாஜக மீது குற்றம் சாட்டி திருமாவளவன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

பாஜக மீது அட்டாக்

அப்போது அவர் கூறுகையில், “பாஜகவைச் சார்ந்தவர்கள் இங்கு திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். வன்முறையைத் தூண்டுவதற்கு தொடர்ந்து வித்திட்டு கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது. திமுக அரசின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இங்கே ஒரு முக்கியமான சக்தியாக உருப் பெற வேண்டும் என்று அவர்கள் கணக்குப்போட்டுச் செய்கிறார்கள். எனவே, ஆளுநர் மீது கல்லெறிந்ததாகவோ, கொடியெறிந்ததாகவோ சொல்லுவது அபத்தமானது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!