நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் கவர்னரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் கவர்னரை நோக்கி பேசுகிறார்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திரைப்படத்தின் பட்ஜெட்டை விட குறைவு
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சந்திரயான் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். ரஷியா அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவிய போதும், இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் - 3ஐ ஏவியுள்ளது. இதில் தமிழர்களின் பங்கும் உள்ளது. சந்திரயான்-3ன் வெற்றி இந்தியாவின் வெற்றி. இது தமிழர்களுக்கான வெற்றி என சுருக்கக் கூடாது. அவர்கள் தேசிய தமிழர்கள் என குறிப்பிட்டார். ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை விட, மிகக் குறைவான பட்ஜெட்டில் சந்திரயான் -3ஐ அனுப்பியிருக்கிறோம்.உலக நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
சாதி வெறியை தூண்டுகிறேனா.?
பாத யாத்திரை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்வர். இதில் பிரமாண்டம் என எதுவும் கிடையாது. என் மண் என் மக்கள் நடை பயணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். ஆனால் பிரமாண்டம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். வயதான ஈவிகேஎஸ் இளங்கோவனும். நடக்க முடியாத அமைச்சர் பொன்முடியும் கூறுவது எனதுநடைபயணம் சாதி வெறியை தூண்டுவதாக அவர்களது இயலாமையை காட்டுவதாக விமர்சித்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பாஜக துணையாக இருக்கும்.
காவிரி பிரச்சனை- இடியாப்ப சிக்கல்
காவிரி விவகாரத்தில் தற்போதைய பிரச்சினைக்கு காங்கிரசே காரணம். காவிரி விவகாரம் இந்த அளவு முற்றியதற்கு காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்த விவகாரத்தில் தீர்க்க வேண்டிய சிக்கலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடியாப்ப சிக்கலாக்கியுள்ளார். இரண்டு மாநில முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு கண்டிருக்கலாம். காவிரி ஆணையம் கூறியதை செய்தால் எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. காவிரி விவகாரம் இந்த அளவுக்கு தீவிரமடைந்ததற்கு தமிழக அரசே காரணம். இரு மாநில மக்களின் உணர்வை தூண்டிவிட்டுள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.
பீகாரில் திமுக போட்டியிட தயாரா.?
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை சரியாக செய்துள்ளார். இனிமேல் ஆளுநரிடம் எதுவும் இல்லை. ஆளுநர் நீட் விவகாரத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை புள்ளி விவரங்களை கூறியுள்ளார். தவறாக எதுவும் சொல்லவில்லை. இனி குடியரசுத் தலைவரிடம் தான் அவர்கள் முறையிட வேண்டும். கவர்னரை பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் கவர்னரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் கவர்னரை நோக்கி பேசுகிறார்கள். கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள். கும்மிடிப்பூண்டியை தாண்ட முடியாது.
அரசு நடத்த தெரியாதவர்கள் அரசில் அமர்ந்துள்ளனர்
அதே போல யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆளுநர் கூப்பிட்டால் திமுகவினர் என்ன செய்வார்கள். கவர்னரை எதிர்த்து கருப்புக் கொடி கட்டுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக ஆளுநருக்கு தலைமைசெயலாளர் விளக்கம் அளிக்கலாம். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஏன் விளக்கம் அளிக்கிறார். யார் கேள்விக்கு யார் பதில் சொல்லணும்? திமுகவுக்கு அந்த Common Sense கூட இல்ல. அரசு நடத்த தெரியாதவர்கள் அரசில் அமர்ந்துள்ளனர் என திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்