அண்ணா சாலை' போன்று 'கலைஞர்' சாலை! திமுகவினரையே மெர்சலாக்கிய நாராயணசாமி !

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 1:00 PM IST
Highlights

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது அதிக பற்றும் மரியாதையும் கொண்டவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. கருணாநிதியின் மறைவை அடுத்து, புதுவையில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது அதிக பற்றும் மரியாதையும் கொண்டவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. கருணாநிதியின் மறைவை அடுத்து, புதுவையில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார். 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், நிதி செயலாளர் கந்தவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

அதேபோல் காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற் படிப்பு மையத்திற்கும் டாக்டர் கலைஞர் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாக கூறினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள என்றும் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். மறைந்த கருணாநிதிக்கு நன்றி செலுத்தும் விதமாக முதலமைச்சர் நாராயணாசாமியின் நடவடிக்கை திமுக உறுப்பினர்களையே மெர்சலாக்கி உள்ளது.

click me!