பெட்ரோல், டீசல் விலை உயர்வு... மத்திய அரசை கடுமையாக சாடிய நமது அம்மா நாளிதழ்!

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 12:39 PM IST
Highlights

பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கம் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்? என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கம் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்? என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

 தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக பாமக, மதிமுக, தமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கின. இந்த போராட்டத்தில் ஆளும் கட்சியான அதிமுக மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், பெட்ரோல் - டீசல் விலையேற்றம் பெரும் கவலை தருவதாக கூறப்பட்டுள்ளது. மனிதன் நிம்மதியாய் வாழும் சூழல் இல்லை என்கிற அளவுக்கு பெட்ரோல் - டீசல் விலையேற்றம் பெரும் கவலை தருவதாகவும், எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியனின் கவலை, சர்க்காருக்கு ஏன் புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

சிலிண்டர் விலையேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தைத் தொடும் நிலையில், நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே என்றும், சிலிண்டர் விலை உயர்வை கேட்டு மக்கள் கவலைப்படுவதை அறியாததுபோல மத்தியில் ஆளும் அரசு நடிப்பதாகவும், விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துவதாகவும், இதன் காரணமாகத்தான் ஆகாய விமானத்திலும் குழாயடி சண்டைக்கு அடிப்படை ஆகுதோ என்று கேள்வி எழுப்பியுள்ளது நமது அம்மா நாளிதழ்.

click me!