
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு டிடிவி தினகரன் ரூ.15 லட்சத்தை அளித்துள்ளார்.
மாணவி அனிதா, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழகத்தில் பல்வேறு
அதிர்வலைகளை எழுப்பியது.
அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு
தரப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாணவி அனிதா உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தாருக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் என நிதியுதவி அளித்தது. இந்த நிலையில்,
மாணவி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூரில் டிடிவி தினகரன் இன்று சென்றார்.
அங்கு அனிதாவின் வீட்டுக்கு சென்ற டிடிவி தினகரன், ரூ.15 லட்சத்தை அவரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி
தினகரன், அனிதாவின் மரணம், அனிதாவின் மரணம், சமூக நீதி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.
அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி செய்தது, அரசியல் ஆதாயத்துக்காக அல்ல என்றும் தினகரன் கூறினார். இதுபோன்ற கொடிய சம்பவம் தமிழகத்தில்
நடந்துவிடக் கூடாது என்றார்.
நம்முடைய உரிமைகளை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், அரசியல் வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக போராட வேண்டும் என்றும் தமிழகத்துக்கு நீட்
தேர்வு தேவையில்லை என்றும் கூறினார்.
பொதுமக்களை பாதிக்கின்ற பிரச்சனைகளை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், தற்போது தமிழகத்தை ஆளும் அரசு மக்கள் விரோத அரசு
என்றும் அவர் குற்றம் சாட்டினார். அனிதாவுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி, 18 எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க டிடிவி தினகரன் சென்றபோது அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன் உடனிருந்தார்.