
மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் அதிருப்தியடைந்த அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, மோடி அரசுடனான கூட்டணியில் தொடர வேண்டுமா என கேள்வி எழுப்பியிருந்தார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள் பாஜகவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.
மேலும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கித் தர வலியுறுத்தி, அங்கு முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது, பாஜகவுடனான கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடுவை, போனில் தொடர்பு கொண்டு, சமாதானப் படுத்தினார். இதையடுத்து பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் அதே நேரத்தில் சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என தெலுங்கு தேசம் அறிவித்தது.
இந்நிலையில் ஆந்திர மாநில திட்டங்களுக்காக, ரூ.1,269 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தமுள்ள ரூ.1,269 கோடியில், போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ.417.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு ரூ.369.16 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.253.74 கோடியும், அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ.192.92 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில நலன்களுக்காக மத்திய அரசை மிரட்டி காரியம் சாதித்துக் கொண்ட சந்திர பாபு நாயுடுவை அம்மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர்.