சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு!! திமுக புறக்கணிப்பு

First Published Feb 12, 2018, 9:55 AM IST
Highlights
jayalalitha photo open in tamilnadu secretariat


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டமன்ற அரங்கில் அமைக்கப்பட்டது. சட்டமன்ற தலைவர் தனபால், ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்தார்.

6 முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சட்டமன்ற அரங்கில் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை திறக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜெயலலிதாவின் உருவப்படம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவருக்கு சட்டமன்ற அரங்கில் உருவப்படம் அமைத்து சட்டசபையின் மாண்பை குழைக்க கூடாது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பாஜக வரவேற்றது.

இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை புறக்கணித்தனர். 

7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை பேரவை தலைவர் தனபால் திறந்துவைத்தார். இந்த விழாவிற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிமுக எம்.பிக்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு திமுக எம்.எல்.ஏக்களின் இருக்கை ஒதுக்கப்பட்டது.

சட்டமன்ற அரங்கில் இதற்கு முன்னதாக மகாத்மா காந்தி, அம்பேதகர், திருவள்ளுவர், காயிதே மில்லத், ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படம் அமைந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் உருவப்படம், முதல்வர் இருக்கைக்கு பின்னுள்ள 2 மற்றும் 3வது தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
 

click me!