ஆந்திராவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நான்தான் தாய் மாமன் !! அவங்கள நான் படிக்க வைப்பேன் !! ஜெகன் மோகன் உருக்கம் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2020, 7:26 AM IST
Highlights


பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000  ரூபாய் வழங்கும் அம்ம வடி திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் இந்த குழந்தைகளுக்கு நானே தாய் மாமன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று  ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய மதிய உணவு திட்டத்தில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு விதமான உணவு வகைகள் வழங்குவதோடு ஒரு இனிப்பு மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000  ரூபாய் வழங்கும் அம்ம வடி  திட்டத்தை முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கிவைத்தார். 

அப்பொழுது பேசிய ஜெகன்மோகன் ,  குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களின் வருங்காலத்தை கேள்விக்குறியாக மாற்றக்கூடிய நிலை உள்ள நிலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் ஆண்டுக்கு 15,000 ரூபாய் அந்த  தாயாரை கவுரவிக்கும் விதமாக  வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக 82 லட்சம் மாணவ மாணவிகளுக்கும் 42 லட்சம் தாயார் பயன் அடைகின்றனர். இதற்காக அரசு 6456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொண்டு மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 

அதில் அன்று - இன்று திட்டத்தின்கீழ் 45 ஆயிரம்  அரசு பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்  அமைத்து தரப்படும். அதன்படி 15715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளது. இதில் கழிவறை, சுத்தமான குடிநீர்,  நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுசுவர், தரமான கட்டிடம் , பெயிண்டிங் செய்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிற்து.

வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில்  ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில் 3 செட் சீருடை,  புத்தகம், ஷூ ,  பெல்ட்,  பை ஆகியவை அடங்கிய கிட் வழங்கப்பட உள்ளது. மேலும் மதிய உணவு தினமும் ஒரே சாப்பாடு வழங்கினால் அது பிள்ளைகளுக்கு  அறுவெறுப்பை ஏற்படுத்து நிலை உள்ளதால் தினந்தோறும் ஒரு மெனு வழங்கப்பட உள்ளது. 

அதில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பருப்பு சாதம்,  புளியோதரை, வெஜிடபிள் சாதம், கிச்சிடி,  கீரை சாதம், சாம்பார் சாதம் மற்றும் ஒரு இனிப்பு மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட உள்ளது. அத்துடன் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் வேகவைத்த முட்டை வழங்கப்படும். 
இவை அனைத்தையும் ஒரு தாய் மாமனாக இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளேன் என்றும் ஜெகன் மோகன் தெரிவித்தார்.
 

click me!