
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஏகேசி சுந்தரவேல் இன்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
இன்று காலை விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நொறுங்கி, லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.
இந்த விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் என 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தரவேல். அதிமுக பிரிந்ததையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார். அக்கட்சியில் திருப்பத்தூர் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.