
தஞ்சாவூர் கதிராமங்கலம் கிராம மக்கள் மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய கண்டிக்கத்தக்கது என்றும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடியடிநடத்தி கலைத்தது. பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ், பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய கதிராமங்கலம் பொதுமக்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியது கண்டிக்கதக்கது என்று கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறி உள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று அதில் கூறியுள்ளார்.
குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் அச்சமடைந்த பொதுமக்கள் துர்க்கையம்மன் கோவில் அருகில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். 8 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், திடீரென அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர்
தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக போராடிய மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தங்கள் பாதுகாப்புக்காக மக்கள் போராட்டம் நடத்திய நிலையில்,
தேவையின்றி போராட்டக் குழுத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். எனவே, கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். பொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கதிராமங்கலம் பகுதியிலிருந்து காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் கதிராமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு மக்களுடன் இணைந்து போராடுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.