சந்திரசேகர ராவுடன் ஸ்டாலின் ஏன் பேசினார் தெரியுமா..? அன்புமணி சொன்ன ரகசியம்!

By Asianet TamilFirst Published May 16, 2019, 7:48 AM IST
Highlights

 தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் வளர்ச்சியைப் பற்றி பேசுவதில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை, முதல்வரை, துணை முதல்வரை, மோடியை பற்ரிதான் பேசுகிறார். ஆனால், நாங்கள் நாகரீகமாக வளர்ச்சியைப் பற்றி பேசி வருகிறோம்.
 

ராகுல் பிரதமராக மாட்டார் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டதால், தற்போது 3-வது அணிக்கு செல்லும் நோக்கத்தில், சந்திரசேகர ராவிடம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் திமுகவை தாக்கி கடுமையாகப் பேசினார். 
 “அதிமுக தோற்க வேண்டும் என்று டிடிவி தினகரன் விரும்புகிறார். ஸ்டாலின் முதல்வராக விரும்புகிறார்கள். ஆனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்குவதுதான் எங்களுடைய விருப்பம். தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் வளர்ச்சியைப் பற்றி பேசுவதில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை, முதல்வரை, துணை முதல்வரை, மோடியை பற்ரிதான் பேசுகிறார். ஆனால், நாங்கள் நாகரீகமாக வளர்ச்சியைப் பற்றி பேசி வருகிறோம்.
ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால், ராகுலே அதை ஏற்கவில்லை. மேற்கு வங்காளம் சென்றபோது, தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒரு போதும் நடக்கப்போவதில்லை.


இது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டதால், தற்போது 3-வது அணிக்கு செல்லும் நோக்கத்தில், சந்திரசேகர ராவிடம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதிலிருந்து எதிரணி குழப்பத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. வாயைத் திறந்தாலே ஸ்டாலின் பொய்ப் பேசுகிறார்.” என்று அன்புமணி பேசினார். 

click me!