விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் போது, திருச்சியில் உழவர்கள் சங்கமம் கொண்டாட்டத்தில் ஸ்டாலின்-சீறும் அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jul 27, 2023, 1:56 PM IST

 விவசாயம் செய்த நிலங்களில் உள்ள பயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான முதல் கண்டனக் குரல் தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, இதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறை சொல்ல முடியாத ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக் கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.
 


விளைநிலங்களை அழிக்கும் என்எல்சி

விளைநிலங்கள் என்எல்சி கையகப்படுத்தப்படுவதை கண்டித்து  பாமக சார்பாக முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக  வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வரும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய  இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மக்களின் விருப்பமும், வலியுறுத்தலும் ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது.

எந்தவித புரிதலும் முதல்வருக்கு இல்லை

என்.எல்.சி என்ற தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு நிறுவனத்திற்காக அப்பாவி மக்கள் அரும்பாடுபட்டு விவசாயம் செய்த நிலங்களில் உள்ள பயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான முதல் கண்டனக் குரல் தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, இதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறை சொல்ல முடியாத ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்ட உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், திருச்சியில் உழவர்கள் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

பயிர்களை அழித்து, வேளாண் விளைநிலங்களை கைப்பற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அத்திட்டத்தை கைவிடுவதுதான் மக்கள் நலன் சார்ந்த அரசின் செயலாக இருக்க முடியும். ஆனால், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்தும், கூடுதல் அடக்குமுறையை கட்டவிழ்ப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து இன்று கூடுதலாக 1000 காவலர்களை வரவழைத்தும், நிலக் கொள்ளையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுகிறது என்றால், அவர்கள் தான் உழவர்களின் முதல் எதிரிகள் ஆவர். எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

என்எல்சி முற்றுகை போராட்டம்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்கு நானே தலைமையேற்கிறேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுவதா? தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா?சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா?இபிஎஸ்

click me!