
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எப்போது சட்டமன்றத் தேர்தல் வருகிறதோ! அப்போது போட்டியிடுவேன் என்று இலைமறைக் காயாக ஒன்லைனில் அரசியல் பிரவேசம் குறித்து பொடி வைத்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த சப்ஜெக்ட் தான் இன்று தமிழகத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது. புதிதாக கட்சியை தொடங்குபவர்கள், பிற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் தாறுமாறாக விமர்சித்திருப்பதையே தமிழகம் இதுவரை கண்டிக்கிறது.
ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் உரையாற்றிய ரஜினி பிற கட்சித் தலைவர்கள் யாரையும் விமர்சிக்காதது அனைவரையும் புருவம் உயரச் செய்தது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியாளர், தலித்துகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர் தொல்.திருமா, நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறந்த போராளி, என ரஜினி கூறியது அரசியல் நாகரீகத்திற்கான புதிய அரிச்சுவடி.
செலக்டிவ் அம்னீசியா மோடில் பா.ஜ.க.வை ரஜினி தள்ளினாலும், தமிழிசை செளந்திரராஜனும் வரவேற்கத் தவறவில்லை. ஆனால் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டும் தனி ரூட்டில் டாப் கியரைத் தட்டி ரஜினியை விமர்சித்து தெறிக்க விட்டிருக்கிறார்.
"ரஜினி என் இனிய நண்பர் . நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம் ரசிப்போம். தமிழகத்திற்கு தேவை நடிகர் அல்ல. நல்ல நிர்வாக திறமையுள்ள நபர். தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். மருத்துவர் தான் வேண்டும்.தமிழகம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
கடனில், ஊழலில் தத்தளிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. வேளாண் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.பொருளாதார வளர்ச்சியில் 21வது இடத்தில் உள்ளது. 1.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
தமிழக உரிமைகளை இழக்கிறோம். இச்சூழலில் நடிகர்கள் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., நடிகர், ஜெயலலிதா நடிகை. நடிகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும்" இவ்வாறு பெருமூச்சு வாங்க ஒரே டேக்கில் டயலாக் பேசுவது போல குமுறியிருக்கிறார்.
என்ன சொன்னார் ரஜினி!... திறமையானவர் என்று தானே அன்புமணியைப் புகழ்ந்தார். அதற்கு எதற்கு விமர்சனம் என்ற கேள்வி இங்கு பிரதானமாக எழலாம். காரணம் இருக்கிறது. நாளையே தேர்தல் வந்தால் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக அவரை தன் பக்கம் இணைக்க விரும்புவதாகத் தெரிகிறது.
அதன் வெளிப்பாடே ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்ததும், ஓ.பி.எஸ். வரவேற்றதும். ஆனால் பா.ம.க. ரஜினி அரசியலுக்கு வருவதை சுத்தமாக விரும்பவில்லை என்பதே அன்புமணியின் காட்டத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர்.