
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவைக் காப்பாற்ற வாக்களித்த மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களை காப்பாற்றியிருப்பேன் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்துதான் பல்வேறு செய்திகளும், கமெண்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் குறித்துதான் பரவலாகப் பேசப்படுகிறது. நிகழ்ச்சிகுறித்து ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளவர்களின் நடவடிக்கைகள், சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 15 பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ருசிகரமான விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், சேரி பிஹேவியர் என்று கருத்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அது மட்டுமல்லாது, அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்படுவதை அடுத்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசனே செய்தியாளர்களை சந்தித்தும் விளக்கமளித்துள்ளார்.
இவ்வளவு சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும், நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மற்றும் நடிகர் பரணியை காப்பாற்ற 1.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிகிறது.
அரசியல் கட்சி தலைவர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இதில் பங்குபெற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு வாக்களித்தது குறித்தும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நடிகை ஓவியாவைக் காப்பாற்ற, 1.5 கோடி தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். ஓவியாவுக்கு ஓட்டுப்போட்ட 1.5 கோடி மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களைக் காப்பாற்றி இருப்பேன் என்று கூறியுள்ளார்.