தாய்மொழிக்கு தேசியக் கல்விக் கொள்கையில் என்ன முக்கியத்துவம் தர முடியும்? இவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே கபடவேடம் என்பது அந்தக் கல்விக் கொள்கையை படித்தாலே புரியும் என்று முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அரசியல் காரணங்களுக்காக அல்ல!
“தேசியக் கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர்” என்று ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி இருக்கிறார். எது பிரச்சினை என்பதைப் பேச மறுக்கும் அவர், அரசியல் காரணங்களைக் காட்டி தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார்.
“நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு வீச்சில் பணிகள் செய்து வருகிறோம். தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிக்கும் தாய்மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்துவிடும். அனைத்து கருத்துகளையும் பள்ளிக் கல்வியில் அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்குத் தயார் செய்ய வழிவகுக்கும். தேசியக் கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான முயற்சியை நாங்கள் தருகிறோம். ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காகத் தான் சிலர் எதிர்க்கின்றனர்” என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க:கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
அரசியல் செய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. அதுவும் பா.ஜ.க. ஆட்சியே அரசியல் ஆட்சிதான், ஆக்கப்பூர்வமானவை எதுவும் இல்லாத ஆட்சி அது. அதில் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
பள்ளி வசதி ஏற்படுத்துதல், சமத்துவம், உள்கட்டமைப்பு, கற்றல் விளைவுகள் மற்றும் நிர்வாகம் ஆகிய கோட்பாடுகளில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தர வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்றுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை வந்து செயல்படுத்துவதற்கு என்ன இருக்கிறது? உலகத்தரத்தில் தானே தமிழக பள்ளிக் கல்வி இருக்கிறது!
* இல்லம் தேடிக் கல்வி
* நான் முதல்வன்
* பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
* பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
* சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
* 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
* பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
* 9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடி வினா போட்டிகள்
* மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி
* ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்
* கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
* உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
* வகுப்பறை உற்று நோக்கு செயலி
* வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு
* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
* இளந்தளிர் இலக்கியத் திட்டம்
* கல்வித் தொலைக்காட்சி
* வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம்
* கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு தரப்பட்டுள்ளது.
* மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்டவை. தேசியக் கல்விக் கொள்கை வந்து செய்வதற்கு இங்கே என்ன இருக்கிறது?தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் தாய் மொழியில் படிக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில் படிக்கலாம். ஆராய்ச்சியை தாய்மொழியில் நடத்தலாம். அரசின் சார்பிலான அனைத்து போட்டித் தேர்வுகளும் தாய்மொழியில் எழுதலாம். அனைத்து தகுதித் தேர்வும் தாய்மொழியில் எழுதலாம்.
மேலும் படிக்க:திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும்..! டெல்லியில் 10 பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்திய அர்ஜுன் சம்பத்
அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வில் தமிழ் தகுதித் தாள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். இதனை விட தாய்மொழிக்கு தேசியக் கல்விக் கொள்கையில் என்ன முக்கியத்துவம் தர முடியும்? இவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே கபடவேடம் என்பது அந்தக் கல்விக் கொள்கையை படித்தாலே புரியும்.
தமிழ் - ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டதாக தமிழ்நாடு இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு வளர்த்தும் இருக்கிறது. பள்ளிகள் வளர்ந்ததன் மூலமாகத் தான் உயர்கல்வி நிறுவனங்களின் தேவை அதிகம் ஆனது. இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
*தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளது.
*தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
*தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது.
*தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளது.
*தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது.
*100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளது.
*40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது.
*30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது.
*30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது.
சாலைகள் தோறும் பள்ளிகள் திறந்தோம். பள்ளிப் பிள்ளைகளுக்கான அனைத்து ஆக்கபூர்வமான வசதிகளையும் செய்து தந்தோம். ஊர்கள் தோறும் கல்லூரிகள் திறந்தோம். அனைவரையும் பள்ளிக் கல்வியுடன் நிறுத்தாமல் உயர்கல்வியையும் தொடர வைத்தோம். இதுதான் தமிழ்நாட்டை இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்தி வைத்திருக்கிறது. இதில் என்ன குறை இருக்கிறது? எதனைச் சரி செய்ய வருகிறது தேசியக் கல்விக் கொள்கை? அதனை தர்மேந்திர பிரதான் தான் சொல்ல வேண்டுமே தவிர நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை.
மேலும் படிக்க:தமிழகத்தில் மத கலவரம் நடக்க கூடாது.. விசிக திருமாவளவனின் அழைப்பை ஏற்ற வேல்முருகன்.!
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தும் அரசியலை செய்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் மொழிவெறியே இதில் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல. இதன் மூலமாக இந்திமொழி பேசுபவர்களின் மேலாதிக்க இந்தியாவாக மாற்ற நினைக்கும் அரசியல் செய்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கும் அரசியல் செய்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு. சமஸ்கிருதமயமாக்கல் அரசியல் செய்ய நினைப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதன் மூலம் மற்ற மொழிக்காரர்களின் படிப்பை தடை போடும் அரசியல் செய்கிறது பா.ஜ.க. மற்ற மொழிகளைக் காலப் போக்கில் அழிக்கும் அழிவு அரசியலைச் செய்கிறது பா.ஜ.க என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.