பிரதமர் ஆபிஸிலிருந்து சென்னை கோட்டைக்கு திரும்பும் அமுதா ஐஏஎஸ்.. திமுக அரசில் காத்திருக்கும் முக்கிய பொறுப்பு!

By Asianet TamilFirst Published Oct 15, 2021, 8:37 AM IST
Highlights

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐஏஎஸ் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்ப உள்ளார்.
 

ஐ.ஏ.எஸ்-இல் 1994-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பி.அமுதா, தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தருமபுரி ஆட்சித் தலைவராக இருந்தபோது, சிசுக்கொலை தடுப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு உள்பட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். பின்னர் காஞ்சிபுரம் ஆட்சித் தலைவராக இருந்தபோது செங்கல்பட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க நேரடியாக அவர் களமிறங்கியது பெரும் பாராட்டை அவருக்குப் பெற்று தந்தது. பின்னர் பல அரசுப் பொறுப்புகளில் இருந்த அமுதா, நீர் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக இருந்துள்ளார். 
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்தபோது, அரசு சார்பில் இறுதிச் சடங்கு பணிகளை ஒருங்கிணைத்தவர் அமுதாதான். குறிப்பாக கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில்தான் அடக்கம் செய்யப்படும் என்பது மதியம் 12 மணி அளவில்தான் நீதிமன்ற உத்தரவு மூலம் உறுதியானது. பின்னர் குறுகிய காலத்தில் மின்னல் வேகத்தில் கருணாநிதியின் இறுதிச் சடங்குப் பணிகளை சிறு சிக்கல்கூட இல்லாமல் முடித்துக்காட்டினார் அமுதா.
பலப் பொறுப்புகளில் பணியாற்றிய அமுதா, கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை தமிழகப் பணிக்கு அனுப்பும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பும் அமுதாவுக்கு முக்கியமான பொறுப்பு தமிழக அரசில் வழங்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

click me!