கொரோனா பரவலால் அனுமதி மறுப்பு.. வேறு வழியில்லாமல் போராட்டத்தை தள்ளிவைத்த டிடிவி. தினகரன்..!

By vinoth kumarFirst Published Aug 5, 2021, 10:48 AM IST
Highlights

கொரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்து வந்த நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு இயல்பு நிலை உருவாகும் சூழல் இருந்ததால் அதை கருத்தில் கொண்டு இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.


கர்நாடக அரசு காவிரியில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆகஸ்டு 6ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என டிடிவி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக தலைமைக் கழக வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழகத்தின் உயிர் நதியான காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மேகதாது அணையை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் வரும் 06.08.2021 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெறவிருந்த அப்போராட்டத்திற்கு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிற காரணத்தை கூறி காவல்துறையினர் இன்று அனுமதி மறுத்துள்ளனர். 

கொரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்து வந்த நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு இயல்பு நிலை உருவாகும் சூழல் இருந்ததால் அதை கருத்தில் கொண்டு இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர்  எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

உலக சுகாதார நிறுவனம், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் புதிய எச்சரிக்கைகளை பொறுப்புள்ள அரசியல் கட்சியாக கருத்தில் கொண்டும், கழக உடன் பிறப்புகள், விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதியும் இப்போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரித்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் இந்த ஆர்பாட்டத்தை தள்ளி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் மீண்டும் இதே போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!