தீயா வேலை பார்க்கும் அமமுக...  அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள்!!

By sathish kFirst Published Jan 1, 2019, 2:17 PM IST
Highlights

28-ந்தேதி திருவாரூருக்கு தேர்தல் அறிவித்த நிலையில், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள அமமுக  கட்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 3-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 10-ந்தேதி மனுத்தாக்கலுக்கு இறுதி நாளாகும்.

1-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற 14-ந்தேதி கடைசி நாளாகும். 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடப்பதைத் தொடர்ந்து 31-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்தன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் உடனடியாக தொடங்கின. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று இரு கட்சிகளும் அறிவித்து உள்ளன. மனு கொடுத்தவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. அமமுக மூத்த தலைவர்கள் 4-ந்தேதி நேர்காணல் நடத்த உள்ளனர்.

தி.மு.க. சார்பில் திருவாரூரில் களம் இறங்க உள்ளூர் நிர்வாகிகள் பலரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் கடந்த தடவை போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தீவிரமாக உள்ளனர். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளில்  அந்தந்த கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்தவுடன், களத்தில் குதித்த திருவாரூர் அமமுக நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் அலுவலகம் அமைத்துவிட்டனர்.  திருவாரூர் தொகுதியில் அமமுக கட்சியின் சார்பில் தேர்தல் அலுவலகத்தில் தொண்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர் லிஸ்டில் இருக்கும் அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜை சந்திக்க மன்னார்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

click me!