ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.
காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.