சசிகலா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் முக்கிய நிர்வாகிகள்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 11:35 AM IST
Highlights

ஜெயலலிதா ஆட்சி அமைய விரும்புவதாக சசிகலா கூறியதையடுத்து அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஜெயலலிதா ஆட்சி அமைய விரும்புவதாக சசிகலா கூறியதையடுத்து அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்  சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். 

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சசிகலா வருகைக்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று அமமுக நிர்வாகிகள் காத்திருந்தார்.ஆனால், சசிகலாவின் விலகல் அறிவிப்பு அமமுக நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகுவதாக மதுரை நகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் வி.கே.சாமி தலைமையிலான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில்;- இந்த மன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் எம்ஜிஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலம் முதல் இருக்கின்றனர். எம்ஜிஆர் வழியில் வந்த எங்களுக்கும், தீயசக்தி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நோக்கம். ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுகவில் இணைந்தோம். 

ஆனால், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததுடன் ஜெயலலிதா ஆட்சி அமைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அமமுகவால் முடியாது. எனவே அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று நம்புகிறோம் என்றனர்.

click me!