அமித் ஷா தலையிடாதது புதிராக இருக்கிறது: சிவசேனா ஆதங்கம்

By Selvanayagam PFirst Published Nov 4, 2019, 9:38 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக, சிவேசனா இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் அமித் ஷா தலையிடாமல் இருப்பது புதிராகவே இருக்கிறது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
 

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த கடந்த மாதம் 24-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

ஆனால், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு சிவசேனா கேட்பதால், அதை வழங்க மனமின்றி இரு கட்சிகளும் ஆட்சி அமைக்கத் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், கடந்த 8 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் புதிய ஆட்சி அமையாமல் இழுபறி நீடித்து வருகிறது.இந்நிலையில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் பேச்சு தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து சிவேசனா மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய ஆட்சி அமைப்பதற்காக எம்எல்ஏக்களை இழுக்கும் பணிக்காக கிரிமினல்கள் உதவியையும், அரசு விசாரணை அமைப்புகளின் உதவியும் நாடப்படுகிறது.எங்களைப் பொறுத்தவரை பாஜகவுடன் இனிமேல் பேச்சு என்றால், அது முதல்வர் பதவி குறித்ததுமட்டும்தான். அது நடக்காவிட்டால், சிவசேனாவில் இருந்து முதல்வர் வருவார். எங்களுக்கு 170 எம்எல்ஏக்களுக்கு மேல் ஆதரவைப் பெற முடியும்.

ஆனால், சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்து வரும்போது, இதில் இன்னும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலையிடாமல் இருப்பது புதிராகவே இருந்து வருகிறது. சிவேசனா தலைவரும், அமித் ஷாவும் அமர்ந்து பேசினால் பிரச்சினை முடிந்துவிடும். தேர்தலுக்கு முன் எடுத்த முடிவுக்கு ஒப்புக்கொண்ட அமித் ஷா , தேர்தல் முடிந்தபின் மகாராஷ்டிரா மாநிலத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்.

எம்எல்ஏக்களை இழுப்பதில் கிரிமினல்களையும், அரசு அமைப்புகளையும் யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை விரைவில் நான் வெளிக்கொண்டு வருவேன். முதல்வர் பதவி ஏற்புவிழாவுக்கு விருந்தினர் இல்லங்கள், வான்ஹடே அரங்கு, மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

ஆனால், ஏன் பாஜக இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. சிவசேனா சார்பில் முதல்வராக பதவியேற்போர் மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்காவில்தான் நிகழ்ச்சி நடக்கும். 170 எம்எல்ஏக்களுக்கு மேல் ஆதரவு அளிப்பார்கள்.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடத்துவதற்கு ஆட்சி ஒன்றும் விளையாட்டல்ல. இது நம்பிக்கை, சுயமரியாதை, உண்மை அடிப்படையில் சிவசேனா செயல்படும். மகாராஷ்டிரா ஒருபோதும் பொய்களை பொறுத்கொள்ளாது. முன்பே முடிவு செய்யப்பட்டதை ஏற்காவிட்டால், மக்கள் உங்களுக்குப் பாடம் புகட்டுவார்கள். யார் பொய் சொல்கிறார்களோ அவர்களிடம்தான் பிரச்சினை இருக்கிறது இவ்வாறு ராவத் தெரிவித்தார்

click me!