
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன.
அதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதனால் அந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, மோடி அலை உள்ளிட்ட பல காரணங்கள், பாஜகவின் வெற்றிக்கு காரணம். இவையனைத்தையும் விட மிக முக்கிய காரணம் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்.
விவசாயத்திற்கு முன்னுரிமை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கவர்ச்சியான வாக்குறுதிகள் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றன. ஆனால், பாஜக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வேலைவாய்ப்பு போதுமான அளவுக்கு உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், அண்மையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், இந்த சேனலின் வாசலில் நின்று பக்கோடா விற்றால் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம். அதுவும் முன்னேற்றம் தானே என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து மாணவர்களிடையேயும் பட்டதாரிகளிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிரதமர், அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்தன.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று தனது முதல் உரையை ஆற்றிய பாஜக தேசியத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷா, மோடியின் கருத்து தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது, வேலையில்லாமல் தவிப்பதை விட பக்கோடா விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மேலானது. தேநீர் விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், பக்கோடா விற்பவர், எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக முடியும் என்றார்.
வேலையில்லாமல் இருப்பதைவிட - இந்த வாக்கியத்திலே பதிலும் உள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது வேலையில்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்பதே மேல் என கூறுகிறார்கள். பக்கோடா விற்பதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற உங்களின் வாக்குறுதி என்னாயிற்று? என பட்டதாரிகளும் மாணவர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரதமர் மோடியின் பேச்சால் ஏற்கனவே கொந்தளித்துள்ள மாணவர்களையும் பட்டதாரிகளையும் மேலும் கோபப்படுத்தும் விதமாக, அமித் ஷாவின் வழிமொழிதல் உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.