வேலூரில் நடைபெறவுள்ள மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை ஓட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஜூன் 8 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அமித்ஷாவின் பயண தேதி மாற்றப்பட்டு, அவர் நாளை (ஜூன் 11) தமிழகம் வருவதாக இருந்தது. தற்போது, மீண்டும் தேதி மாற்றப்பட்டு, அவர் இன்று இரவு சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 9 மணி அளவில் சென்னை வரும் அமித் ஷா, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
அங்கு கூட்டணி கட்சித் தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை கோவிலம்பாக்கத்தில் நாளை காலை 11 மணி அளவில் பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். இதனால் அமித்ஷா செல்லும் இடங்கள் எல்லாம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த தொழில், கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவையில் சாதித்த 25 பிரபலங்களுடன் இரவு உணவு அருந்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யாரென்று இன்னும் தெரியவில்லை. விரைவில் தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..2024 தேர்தல் முதல் ஜிஇ ஒப்பந்தம் வரை.. பிரதமர் மோடியின் அமெரிக்கா டூர் பிளான் - ஜோ பைடன் போட்ட புது ஸ்கெட்ச்