நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலின்போது உட்கட்சி பூசலால் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பதவி பறிக்கப்பட்டு மேயராக தேர்வு பெற்ற மகேஷிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ் - மேயர் மகேஷ் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் நிலையில் இருதரப்பினரிரையும் பேச்சுவார்த்தை நடத்தி திமுக எம்.பி. கனிமொழி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த மனோதங்கராஜ். கடந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே திமுக எம்.எல்.ஏ. ஆவார். தற்போது பால்வளத்துறை அமைச்சராக உள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலின்போது உட்கட்சி பூசலால் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பதவி பறிக்கப்பட்டு மேயராக தேர்வு பெற்ற மகேஷிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதனால், குமரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் மனோ தங்கராஜிம் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள நாகர்கோவில் மேயர் மகேஷிம் இணை பிரியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், தான் மாவட்டங்களில் விடப்படும் டெண்டர் விவகாரங்களில் அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் தலையீடு அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மேயர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், அமைச்சர் மனோ தங்கராஜிக்கும், மேயர் மகேஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கவுன்சிலர்களை மகேஷிக்கு எதிராக திருப்ப மனோ தங்கராஜ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாக நிலவிய இந்த மோதல் போக்கால் மேயரும், அமைச்சரும் ஒரே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, தனித்தனியே கட்சி போஸ்டர்கள் அடிப்பது என ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான பூசல் வெட்ட வெளிச்சமானது.
நாளுக்கு நாள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த மாதம் கன்னியாகுமரி வந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் இருவரையும் சமாதானமாக செல்லுமாறு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த திமுக எம்.பி. கனிமொழி மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இதுபோன்ற மோதல் போக்கு நிலவினால் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என இருவருக்கும் கனிமொழி எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.