அமித் ஷா சென்னை வருகை.. புறக்கணித்த பாமக – தேமுதிக... பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Nov 23, 2020, 12:38 PM IST
Highlights

பாஜகவின் அதிகாரம் பொருந்திய நபரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை வருகையின் போது முக்கிய கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக அவரை கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜகவின் அதிகாரம் பொருந்திய நபரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை வருகையின் போது முக்கிய கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக அவரை கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளும் இடம்பெற்று இருந்தன. கூட்டணியில் அதிமுகவிற்கு அடுத்து அதிக இடங்களில் பாமக போட்டியிட்டது. தேமுதிகவிற்கும் கணிசமான தொகுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசு மீது பாமக வழக்கமான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளிப்படையாக எதிர்த்து வருகிறார். அதே சமயம் தேமுதிகவோ அதிமுக கூட்டணியில் இருக்க காரணமே பாஜக தான்.

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது கேட்ட தொகுதிகளை வழங்க அதிமுக மறுத்துவிட்டது. ஆனாலும் கூட அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்ல பாஜக மேலிடம் தான் காரணம். அப்போது தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபா எம்பிக்கு ஏற்பாடு செய்வதாக பாஜக தரப்பில் தரப்பட்ட உறுதி மொழியின் அடிப்படையில் தான் தேமுதிக அந்த கூட்டணியில் இணைந்ததாக அப்போது பேச்சுகள் அடிபட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வேறு மாதிரி அமைந்துவிட்டன.

கடந்த 2014 தேர்தலை போல பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் பாமக மற்றும் தேமுதிகவால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. இதனால் மத்தியில் அமைந்த அமைச்சரவையில் பாமக மற்றும் தேமுதிகவால் இடம்பெற முடியவில்லை. அதே சமயம் அதிமுக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆக்கப்பட்டார். ஆனால் அவரை தற்போது வரை பாஜக அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

அன்புமணியை எப்படியும் மறுபடியும் மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ராமதாஸ் தீவிரமாக முயன்று வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை ஏற்கனவே ஒரு முறை டெல்லி சென்று ராமதாஸ் சந்தித்து திரும்பினார். ஆனால் மத்திய அமைச்சரவையில் கேபினட் ரேங்கில் அன்புமணிக்கு இடம் ஒதுக்க பாஜக தயாராக இல்லை. இதனால் தான் மத்திய அரசை ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறுகிறார்கள். இதே போல் பாஜக கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான் வெறும் 4 தொகுதிகளுக்கு ஓகே சொல்லி அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

அந்த நான்கிலும் தோல்வி அடைந்தாலும் தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபா பதவி கிடைக்கும் என்று தேமுதிக எதிர்பார்த்தது. ஆனால் பாஜக இந்த விவகாரத்தில் தேமுதிகவிற்கு சாதகமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள். அதே சமயம் பாஜக அறிவுறுத்தலின் பேரில் ஜி.கே.வாசனை அதிமுக ராஜ்யசபா எம்பி ஆக்கியதாக கூறுகிறார்கள். இதனால் பாஜக மீது தேமுதிகவிற்கு அதிருப்தி அதிகமானதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் அமித் ஷா சென்னை வந்த நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் என்கிற முறையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் தாங்கள் சந்திக்க விரும்பவில்லை என்று இரண்டு கட்சிகள் தரப்பிலும் கூறிவிட்டதாக சொல்கிறார்கள். இதே போல் விமான நிலையத்தில் அமித் ஷாவை வரவேற்கவும் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் இரண்டு கட்சிகளுமே தங்களின் பிரதிநிதிகள் என்று யாரையும் அனுப்பவில்லை. மேலும் விமான நிலைய வாயிலில் அமித் ஷாவிற்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் மட்டுமே வரவேற்பு அளித்தனர். இதனால் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

click me!