சரியான நேரத்தில் 100 கருவிகளை வழங்கிய அமெரிக்கா...!! இந்தியாவின் உதவிக்கு கைமாறு என நெகிழ்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 12:52 PM IST
Highlights

நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 100 புதிய மற்றும் அதிநவீன வென்டிலேட்டர்களை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இதை சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளது. கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் 180க்கும் அதிகமான  நாடுகளில் தன் கொடூர முகத்தை காட்டிவருகிறது, இந்த வைரசால் கூட்டம் கூட்டமாக மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை எதிர்கொள்ள கடந்த சில மாதங்களில் அமெரிக்கா அதிரடியாக சுமார்  ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்துள்ளது. 

ஆனால் அந்நாட்டில்  அதற்கான தேவை அதிகம் ஏற்படவில்லை என்பதால், அந்த வென்டிலேட்டர்களை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள  ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. முன்னதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி உதவிய நிலையில், இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  வென்டிலேட்டர் பற்றாக்குறையில் உள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர்களை வழங்கி உதவும் என கூறினார். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவைரஸ் தொற்றால் அன்றாடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. கிட்டத்தட்ட இதன் மதிப்பு 1.2 மில்லியன் டாலர் ஆகும். 

ஐ.ஆர்.சி.எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத்  ஜஸ்டர் 100 வென்டிலேட்டர்களின் முதல் தொகுதியை செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெனரல் ஆர்.கே ஜெயினிடம் ஒப்படைத்தார், இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  covid-19 உடன் எதிர்த்து போராட இந்தியாவுக்கு அதிநவீன வென்டிலேட்டர்களை அமெரிக்க அரசு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் மூலம் நன்கொடையாக அளித்தது. covid-19 தொற்றுநோய் உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, கூட்டாண்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே உலக மக்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும். இதே எண்ணத்தில்தான் அமெரிக்காவிற்கும் அமெரிக்கர்களுக்கும் தாராள மனப்பான்மையுடன் உதவிய   இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதில் அமெரிக்கா மகிழ்ச்சி அடைகிறது என அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் வழங்கிய அமெரிக்காவுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!