தமிழக முதலமைச்சர் எடப்பாடியாரை பாரட்டிய வைகோ...!! 1018 ஊர்களின் பெயர்களை திருத்த வேண்டும் என கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2020, 12:06 PM IST
Highlights

எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி.‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள்.அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட, ‘டமில் நடு’ என்றுதான் சொல்லுகின்றார்கள். 

1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் திருத்தங்கள் தேவை என வைகோ தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை.குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்கவில்லை; தெளிவுபடுத்தவில்லை.வேலூர் என்பதை, ஆங்கிலத்தில் ‘Veeloor’ வீலூர் என எழுதியதற்குப் பதிலாக, ‘Vaeloor’ என எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். வீடூர் என்பதை, ‘Veedur’ என எழுதி இருக்கின்றார்கள். டூர் என்ற நெடில் இல்லை. சில ஊர்களின் பெயர்களில் மட்டும் நெடிலாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இரண்டு ‘AA’ சேர்த்து எழுதப்பட்டு இருக்கின்றது. பல ஊர்களில் அந்த மாற்றம் இல்லை. வடக்கு அவிநாசிபாளையம் என்பதில், பாளையம் என்ற நெடிலுக்கு இரண்டு ‘AA’ உள்ளது, ஆனால், அவினாசி என்ற நெடிலுக்கு ஒரு ‘A’ தான் உள்ளது. எனவே, அதை அவினசிபாளையம் என்றே வாசிக்க முடியும்.  திருவாதவூருக்கு இரண்டு ‘AA’ இல்லை. எனவே, திருவதவூர் என ஆகின்றது.  திருவாரூர் என்பது, திருவரூர் என்றே இருக்கின்றது.பெரியநாயக்கன்பாளையம் என்பதை, பெரியநயக்கன்பாளையம் என்றே வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

ஆண்டிபாளையம், அண்டிபாளையம் ஆக இருக்கின்றது. மணப்பாறையில் இரண்டு  ‘AA’ இல்லை. அதியமான் கோட்டை என்பது, ‘Athiyamankottai’ என்கிறது அரசு ஆணை. இங்கே, மான் என்ற  நெடிலுக்கு இரண்டு ‘AA’ இல்லை. திருமுல்லைவாயில் என்பது, ‘Thirumullaivaayal’ என மாற்றம் பெற்றுள்ளது. அதில், ‘த’ என்ற எழுத்திற்கு, ஆங்கிலத்தில் ‘Th’ என எழுதப்பட்டு இருக்கின்றது. தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கின்றார்கள். ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே ‘T’ என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும். அதேபோல, தென்காசி என்பதும் ஆங்கிலத்தில் டென்கசி என்றே வாசிக்கக்கூடியதாகவே இருக்கின்றது. திருத்தம் தேவை. திருவில்லிபுத்தூர் என்பதில் இரண்டு ‘OO’ இல்லை. ஈரோடு என்பதற்கு, இரண்டு ‘EE’ தேவை.சேத்தூர் என்பதற்கு, மாவட்ட ஆட்சியர் ‘Seththur’ என பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதை ‘Saeththoor’ என மாற்றி இருக்கின்றார்கள். இரண்டுமே பிழையானது. அது ‘ளுயநவாவாடிடிச’ என்றே இருக்க வேண்டும்.தூக்கநாயக்கன் பாளையம் என்ற பெயரே இல்லாமல் போய்விட்டது. அதை, ஆங்கிலத்தில் ‘Thu.Naa. Paalayam’ என மாற்றி விட்டார்கள். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது, வடமொழியில் எழுதப்பட்டு இருந்த சில ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினார். 

குறிப்பாக, ‘மாயவரம்’ என்பது மயிலாடுதுறை ஆனது. ஆனால், வேதாரண்யம்,  திருமறைக்காடு ஆகவில்லை. ‘விருத்தாசலம்’, திருமுதுகுன்றம் ஆகவில்லை. இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இதுகுறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும். தமிழில் வேப்பேரி என்பது ஆங்கிலத்தில் ‘Vepperi’ என்கிறது அரசு ஆணை.வே என்ற நெடில் வெ என்ற குறில் ஆகி இருக்கின்றது. ‘Vaeppaeri’ என்பதே பொருத்தமாக இருக்கும். க் என்றால் இரண்டு ‘KK’, ‘ச்’ என்றால் ‘Ch’ போட்டு இருக்கின்றார்கள். இது சரியானதே. ஆனால், இந்த மாற்றமும் பல ஊர்ப் பெயர்களில் இடம் பெறவில்லை.வாக்கூர் என்பதை மாவட்ட ஆட்சியர் ‘Vaakkur’ என பரிந்துரை செய்து இருக்கின்றார். அரசு, ‘Vaakoor’ வாகூர் என ஆக்கி இருக்கின்றது. அதில் இரண்டு KK இல்லை.‘மல்லிகைச் சேரி’ என்ற ஊர் ஆங்கிலத்தில் ‘Mallikaichcheri’ ஆகி இருக்கின்றது. ஆனால், எருக்கஞ்சேரி ‘Erukkenjery’ ஆகி இருக்கின்றது. இரண்டுமே சேரிகள்தான். ஆனால் அதை, ‘cheri, jery’ என இரண்டுவிதமாக எழுதி இருக்கின்றார்கள்.சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் ‘Solinganalloor’ ஆகி இருக்கின்றது. ஆனால், எழும்பூர், ‘Ezhumboor’ ஆகி இருக்கின்றது. இரண்டு ஊர்களிலும், சிறப்பு ‘ழ’ கரம்தான் இருக்கின்றது. ஏன் இரண்டு விதமாக எழுதுகின்றார்கள்? ‘Ezhumboor’ என்று எழுதினால், அதை ‘எஸ்ஹும்பூர்’ என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். ‘எழும்பூர்’ என வாசிக்க மாட்டார்கள். இது மிகப்பெரிய குழப்பம். 

எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி.‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள்.அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட, ‘டமில் நடு’ என்றுதான் சொல்லுகின்றார்கள். அதையும் ‘Thamilnaadu’ என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். அதற்காக, அறிஞர்கள் குழு ஒன்றைத் தெரிவு செய்து பொறுப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
 

click me!