கிழிக்கப்பட்ட அம்பேத்கர் போஸ்டர்... தட்டிக்கேட்ட தலித் இளைஞர் அடித்துக் கொலை..!

By Thiraviaraj RMFirst Published Jun 12, 2021, 4:30 PM IST
Highlights

அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், வினோத் பாம்னியாவையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அம்பேத்கர் போஸ்டரை கிழித்தவர்களை தட்டிக்கேட்ட தலித் இளைஞரை, இந்துத்வா கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தின் கிக்ரலியா கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாம்னியா. 21 வயதே ஆகும் வினோத் பாம்னியா, சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான, ‘பீம் ஆர்மி’ அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஹனுமன்கர் சோனேரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்துத்வா அமைப்பினர் வன்முறையை தூண்டும் வகையில், அனுமன் மந்திர துண்டறிக்கையை விநியோகித்தபோது அதனை தடுத்து நிறுத்தியுள்ளார் வினோத் பாம்னியா. இதனால் ஆத்திரமடைந்த மதவெறியர்கள் வினோத் பாம்னியாவை கொலை செய்துவிடுதாக மிரட்டியுள்ளனர். அதுபற்றி அப்போதே காவல்துறையிலும் வினோத் பாம்னியா புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், மே 24ம் தேதி அன்று பாம்னியாவின் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை அந்த ஊரின், சாதிய - மதவாத கும்பலைச் சேர்ந்தவர்களால் கிழித்தெறிந்துள்ளனர். இதற்கு எதிராக தலித் மக்கள் திரளவே, போஸ்டர் கிழிப்பில் ஈடுபட்டவர்களின் பெற்றோர்கள் பஞ்சாயத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனால் அப்போதைக்கு பிரச்சனை முடிந்துள்ளது.

ஆனால், மறுநாளே வீட்டுக்கு அருகே உள்ள சாலை வழியாக செல்லும்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், வினோத் பாம்னியாவையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மே 25 அன்று இரண்டாவதாக ஒரு புகார் மனுவை, ராம்சார் காவல்நிலையத்தில் வினோத் பாம்னியா அளித்துள்ளார். எனினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

 

இதனால் தைரியமடைந்த இந்துத்வா கும்பல் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வினோத் பாம்னியாவும், அவரது நண்பர் முகேஷூம் தங்களின் வயல்களுக்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்து, ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கி, காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வினோத் பாம்னியா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்துள்ளனர்.

click me!