
தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது என அண்ணாமலையை எச்சரிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் மொத்தமாக 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- எங்களை டச் பண்ணுவது.. நெருப்போடு விளையாடுவதற்கு சமம்.. அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்..!
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவியும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- அதிமுகவில் அனைவரின் சொத்து விவரங்களையும் தெளிந்த நீரோடை போல தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கிறோம். ஊழல் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்து கொள்ளுங்கள். மடியிலே கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு தைரியமாக சொல்கிறேன். தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது என அண்ணாமலை எச்சரிக்கும் வகையில் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இதையும் படிங்க;- சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்.. அசராமல் திமுகவுக்கு சவால்விட்டு திருப்பி அடிக்கும் அண்ணாமலை..!
இந்நிலையில், ஜெயக்குமார் பேசியதை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பாஜக விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எங்களை தேவையில்லாம 'டச்' பண்ணினா நெருப்போட விளையாடற மாதிரின்னு அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே... முதல்ல நீங்க எரியும் நெருப்பாகிட்டு அப்புறம் வாங்க. நாங்க எப்படி விளையாடுவோங்கறதை ரசிச்சுப் பாருங்க என்று குறிப்பிட்டுள்ளார்.