சபாநாயகர் பதவியை அடிச்சுத்தூக்கும் தென்மாவட்டங்கள்.. 10 முறை கிடைத்த வாய்ப்பு.. நெல்லைக்கு மட்டும் 5 முறை.!

By Asianet TamilFirst Published May 12, 2021, 9:41 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோரே இதுவரை அதிகளவில் அவையை அலங்கரித்திருக்கிறார்கள்.
 

தமிழக 16-வது சட்டப்பேரவையின் தலைவராக  நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவுவும், துணைத்தலைவராக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் தேர்வாவது உறுதியாகிவிட்டது. சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இவர்கள் இருவரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் நேரம் முடியும் வரை வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதுபற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையை தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே  அதிகளவில் தலைவர்களாக இருந்து அவையை அலங்கரித்திருக்கிறார்கள். 1962-இல் எஸ்.செல்லத்துரை (நெல்லை), 1967-இல் சி.பா. ஆதித்தனார் (நெல்லை), 1986-இல் பி.ஹெச்.பாண்டியன் ( நெல்லை), 1989-இல் தமிழ்க்குடிமகன் (சிவகங்கை), 1991-இல் சேடப்பட்டி முத்தையா (மதுரை), 1996-இல் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (மதுரை), 2001-இல் கா. காளிமுத்து (மதுரை), 2006-இல் இரா. ஆவுடையப்பன் ( நெல்லை) ஆகிய தென் மாவட்டத்துக்காரர்கள் பேரவைத் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது 9-ஆவதாக அப்பாவு நெல்லை மாவட்டத்திலிருந்து தலைவராகிறார்.
இதில் அப்பாவுவையும் சேர்த்து நெல்லை மாவட்டத்திலிருந்து மட்டும் 5 பேர் பேரவைத் தலைவர் என்ற சிறப்பை பெறுகிறார்கள். மேலும் 6-வது முறையாக திமுக ஆட்சி தற்போது அமைந்துள்ளது. திமுக ஆட்சியில் 5 முறை தென் மாவட்டத்திலிருந்தே பேரவைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1972-76 வரை தற்காலிக பேரவைத்தலைவராகச் செயல்பட்ட சீனிவாசனும் விருதுநகரைச் சேர்ந்தவர்தான்.

click me!