
மைத்துனர் துணை இருந்தால் மலையே ஏறலாம். ஆனால் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷே, திவாகரன் பக்கம் தாவியதால் கொதித்து போயிருக்கிறார் தினகரன்.
தினகரன் திகார் சிறைக்கு செல்வதற்கு முன், சென்றதற்கு பின் என நாட்களை இரண்டாக பிரித்தால், இரண்டாம் பாகம், தினகரனுக்கு பெரும் பின்னடைவையே தந்துள்ளது.
தினகரனின் தன்னிச்சையான செயல்பாடு காரணமாகவே, சசிகலா மற்றும் குடும்ப உறவுகளுக்கு கடும் நெருக்கடி வந்ததாக போட்டு கொடுத்து, சசிகலாவே தினகரனை விலக்கி வைக்க காரணமாக இருந்தார் திவாகரன்.
தற்போது, தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகளை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் மணம் முடிக்க இருப்பதால், தினகரனுக்கு எதிரான மன்னார்குடி கூட்டணி வலுவாகி விட்டது. அதில் டாக்டர் வெங்கடேஷும் சேர அப்செட் ஆனார் தினகரன்.
நமக்கு தேவையானதை எல்லாம், எடப்பாடி எந்த சிக்கலும் இல்லாமல் செய்து கொடுக்கிறார். இந்த நேரம் பார்த்து தினகரன் உள்ளே நுழைந்தால், அவை அனைத்தும் கெட்டுப்போய் விடும்.
எனவே, தினகரனை ஒதுக்கி வைப்பதே நமக்கு நல்லது. நாம் ஒதுங்கி நின்றே அனைத்து காரியத்தையும் சாதித்து கொள்வோம். மத்திய அரசும் நம் மீது கோபப்படாமல் இருக்கும் என்று அந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.
மறுபக்கம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலரை, அமைச்சர்கள் மூலம் சரிக்கட்டி தன் பக்கம் திருப்பி விட்டார் எடப்பாடி. தற்போது வெறும் 5 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே அவர் பக்கம் இருப்பதாக தகவல்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தினர் கேட்பதை செய்து கொடுப்போம். ஆனால், அவர்கள் ஆட்சியிலோ, கட்சியிலோ தலையிட்டால் டெல்லியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று நினைக்கிறது.
ஒரே அடியாக, சசிகலா குடும்பத்தை ஒதுக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக ஒதுக்குவதுதான் நல்லது. அப்போதுதான் ஆட்சியை சிக்கல் இன்றி கொண்டு செல்ல முடியும். தினகரனை ஒதுக்கி விட்டாலே அனைத்தும் சரியாகிவிடும் என்பதே அவர்களின் கணக்காக உள்ளது.
அதற்கு, திவாகரன் ஆதரவு அமைச்சர்களும் கை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் என அனைவரும் போனாலும் கவலை இல்லை. சொந்த மைத்துனர் டாக்டர் வெங்கடேஷே போய்விட்டதுதான் தினகரனை கவலை அடைய வைத்துள்ளது.
எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் தினகரனுக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கின்றனர். தினகரனை ஆதரித்தால், மீண்டும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின்கீழ் வர வேண்டியிருக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதனால், எடப்பாடி சொல்வதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். தற்போதைய நிலவரப்படி, எடப்பாடியின் கட்டுப்பாட்டிலேயே கட்சி மற்றும் ஆட்சி வந்துவிட்டது.
சசிகலா சிறையில் இருப்பதால் அவரால் எதுவும் செய்ய முடியாது. தினகரனை ஒதுக்கும் வேலைகளும், சசிகலா உறவுகளின் துணையுடன் முக்கால்வாசி முடிந்து விட்டது.
எடப்பாடி உள்பட யாரையும் பகைத்து கொள்ளாமல், தினகரன் எதிர்ப்பை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, கட்சி மற்றும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு தமது காரியத்தை சாதித்து கொண்டிருக்கிறார் திவாகரன்,.
அதனால், “இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் கொங்கு மண்டலமே” என்று சொல்லும் வகையில் அதிமுகவில், கொங்கு மண்டலத்தின் கொடியே வானளாவ பறக்கிறது.