
தினம் தினம் தேசிய அளவிலான டிரெண்டிங்கில் இருக்கிறது அ.தி.மு.க. வடக்கில் நிகழ்ந்தால் மட்டுமே பிரேக்கிங் என்கிற நிலையிலிருந்த வட இந்திய சேனல்கள் இன்று கேமெராவை தூக்கிக் கொண்டு எடப்பாடி மற்றும் தினகரனின் பின்னே ஜல்தி ஜல்தியாய் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இன்றைய அ.தி.மு.க. என்ன செய்தாலும் அது பிரேக்கிங்தான். எடப்பாடி குமுறினாலும் நியூஸ், குனிந்தாலும் நியூஸ், குளித்தாலும் நியூஸ். எடப்பாடியின் குமுறலுக்கும், குனிதலுக்கும், குளித்தலுக்கும் தினகரன் கொடுக்கும் அசால்ட் அட்டாக்குகள் அதைவிட பற்றி எரிகின்றன.
அந்த வகையில் மகா புஷ்கரத்தை முன்னிட்டு இன்று காவிரியில் அமைச்சர் சகாக்களுடன் பனியன் அணிந்து எடப்பாடி நீராடிய காட்சி தென்னிந்திய மட்டுமல்ல வட இந்திய சமூக வலைதளங்களையும், சேனல்களையும் தெறிக்க விட்டிருக்கிறது. ஓ.எஸ். மணியனும், எம்.சி. சம்பத்தும் சற்றே கூச்சத்துடன் காவிரியில் தலை முழுக, முதல்வரோ பாதுகாவலர்கள் புடை சூழ புஜபலபாரக்கிரமசாலியாக காவிரியில் மூழ்கி எழுந்து தலைகோதிய காட்சியை ’வாட் எ மேன்’ என்று எமோஜி போட்டு சிலிர்க்கிறார்கள் நேஷனல் லெவல் நெட்டிசன்கள். இதில் எடக்கு பாதி என்பது தனி கதை.
அத்தோடு விட்டாரா எடப்பாடி! யாருமே கேள்வி கேட்க இயலாதவராய் இருந்த காஞ்சி ஜெயேந்திரரை கைது செய்து தேசத்தையே அலற வைத்தவர் ஜெயலலிதா. அந்த நொடியிலிருந்து ‘அ.தி.மு.க.’ எனும் வார்த்தையை கேட்டாலே அஷ்டகோணலாய் முகத்தை சுளித்து அபத்தமாய் அந்த வார்த்தையை நினைக்கும் அதே ஜெயேந்திரரை சந்தித்து வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.
நாகையில் நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவுக்கு போகையில் ஆன் தி வேயில் எடப்பாடி இப்படி பின்னியெடுத்து டிரெண்டிங்காகி நிற்கிறார்.
இந்நிலையில் எடப்பாடியின் புனித நீராடலை ஜஸ்ட் லைக் தட் ஆக வறுத்தெடுத்து ஒரே நொடியில் காலி பண்ணியிருக்கிறார் தினகரன். திருச்சி ஏர்போர்ட்டில் மீடியாவை சந்தித்த தினா “எடப்பாடி என்னமோ காவிரியில் புனித நீராடியிருக்கிறாராம். தனக்கு முதல்வர் பதவி தந்த சின்னம்மாவுக்கும், கோடிக்கணக்கான கழக தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு எந்த புனித நதியில் அவர் நீராடினாலும் துளி பாவமும் அவரை விட்டு அகலாது. எங்கே சென்றாலும் இந்த பாவத்தை அவரால் தொலைக்கவே முடியாது.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார்.
இதையும் கலகலவென கேரி செய்திருக்கின்றன வட இந்திய சேனல்கள்.
நெகடீவ் எக்ஸ்போஸரானாலும் பப்ளிகுட்டி பப்ளிகுட்டிதானே!