அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்.. தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சு.சுவாமி!

By Asianet TamilFirst Published Sep 29, 2021, 9:19 AM IST
Highlights

தமிழக திருக்கோயில்களில் புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச கோர்ட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
 

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட்டில் 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எதிர்த்து வந்தார். கோயில்களில் தலையிடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் திமுக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி ஏற்கனவே கூறியிருந்தார்.

 
இந்நிலையில் இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. இது மத உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த ரிட் மனுவை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை, தமிழக கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கவும், ஏற்கனவே உள்ள அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
வழக்கு தொடர்ந்துள்ளதை ட்விட்டரில் தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, ‘ரிட் மனு தொடர்பான விசாரணை தேதியை விரைவில் தெரிவிக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

click me!