திமுக ஆட்சி போல நமக்கு கிடைக்காதா என பல மாநிலங்கள் ஏங்குகின்றன.. கனிமொழி அதிரடி சரவெடி..!

By Asianet TamilFirst Published Sep 29, 2021, 8:47 AM IST
Highlights

பல மாநிலங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி போல நமக்கும் கிடைக்காதா என ஏங்குகிறார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
 

தென்காசியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சிறந்த ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல பத்திரிகைகளும் இந்த அரசைப் பாராட்டுகின்றன. அந்த அளவிற்கு இந்த ஆட்சி உள்ளது. பல மாநிலங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி போல நமக்கும் கிடைக்காதா என ஏங்குகிறார்கள். கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள் எதுவுமே இங்கு நடைபெறவில்லை. 
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கவும் முன் வரவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அத்திட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளார். ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் அமையவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பெரியாரின் கனவாக இருந்தது. அதை நனவாக்கிக் காட்டியுள்ளார் ஸ்டாலின்.  முதன் முறையாக விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் இந்த ஆட்சியில்தான் போடப்பட்டது. பெண்களுக்கு பேருந்தில் செல்ல இலவச பயணம், தேர்தல் வாக்குறுதிபடி ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கினார். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி இந்த ஆட்சியில் 4 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட்டன என்கிறார். அவரும் சட்டமன்றம் செல்கிறார். ஆனாலும் அவர் ஏன் அப்படி சொல்கிறார் என தெரியவில்லை.


உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக செல்லும். எனவே, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்” என்று கனிமொழி பேசினார்.

click me!