மது போதைக்கு அடிமையாகி தன்னை பெற்றவர்களையே எரித்து கொலை செய்யும் அவலம்! இது தான் திராவிட மாடலா? பாஜக விளாசல்!

By vinoth kumar  |  First Published Jan 2, 2024, 7:10 AM IST

தோல்வி பயத்தின் காரணமாக நடைபெற்ற 22 தற்கொலைகளை, 'நீட் கொலைகள்' என்று சொல்லி பல லட்சம் கையெழுத்துகளை பெறுகிறோம், போராடுகிறோம் என்று மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவது எந்த வகையில் நியாயம்? 


போதைக்கு அடிமையாகி பெற்றவர்களையே கொலை செய்யும் பாதகர்களை உருவாக்குகிற அளவிற்கு தமிழகத்தில் மதுவின் தரம் உள்ளது என நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  நாகை மாவட்டம் கொள்ளித்தீவை சேர்ந்த 44 வயது நபர் கணேசன் என்பவர், மது போதையில் பணம் தர மறுத்த 62 வயதான தன் தந்தையை கட்டையால் அடித்து கொன்றிருப்பது தமிழகத்தில் அதிகரித்து வரும் 'மது'க் கொலைகளை வெட்ட வெளிச்சமாக்குகிறது. கடந்த வாரம் சங்கரன்கோவில் மணலூர் கிராமத்தை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற 45 வயது நபர், மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தன் 65 வயதான தாயை உயிரோடு கொளுத்தி கொலை செய்ததும், செப்டம்பர் மாதம் நம்பியூரை சேர்ந்த சாமிநாதன் என்ற நபர், 2018ம் ஆண்டு, மது அருந்த பணம் கொடுக்க மறுத்த  தன் தந்தையை ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக மது போதையில் உளறியதையடுத்து கைது செய்யப்பட்டதும்,  சிங்கம்புணரியில் மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன் என தமிழக அரசு விநியோகிக்கும் டாஸ்மாக் 'சரக்கிற்கு' அடிமையாகி கடந்த பல வருடங்களில் பல நூற்றுக்கணக்கான தாய், தந்தையர்கள் படு கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அவ்வளவு பேர் மத்தியில் பெண் காவலர் மீது தாக்குதல்! திமுக பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்யுங்கள்! நாராயணன் திருப்பதி

'தமிழ்க்  குடிமகன்கள்' மது போதைக்கு அடிமையாகி தன்னை பெற்றவர்களையே அடித்து, எரித்து, நெரித்து கொல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது நம் தமிழகம். இது மட்டுமல்ல, மது அருந்தி விட்டு வாகனங்களை செலுத்தி பல ஆயிரக்கணக்கான மரணங்கள், மது அருந்தி விபத்துகளில் பலியானவர்கள், நண்பர்களிடையே தகராறில் அடித்து கொலை என்று பல ஆயிரம் கொலைகள் கடந்த பல வருடங்களில் தமிழக ஊடகங்களில் பல நூற்றுக்கணக்கான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிற நிலையில், அதன் காரணமாக கொலைகளும் அதிகரித்து வருகிறது.

ஆனால், இது குறித்து எந்த வித கவலையும் இல்லாமல், தோல்வியின் காரணமாக, தோல்வி பயத்தின் காரணமாக நடைபெற்ற 22 தற்கொலைகளை, 'நீட் கொலைகள்' என்று சொல்லி பல லட்சம் கையெழுத்துகளை பெறுகிறோம், போராடுகிறோம் என்று மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவது எந்த வகையில் நியாயம்? தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. கல்வி முறையில் மாற்றம், சீர்திருத்தம் செய்யப்படும் வேளையில், முறையான, தகுதியான, தரமான, முன்னேறிய கல்வியை  கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுகளுக்கே உள்ளது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வி முறைகளில் மாற்றம் என்பது மாறாதது. ஆகையால் உரிய நேரத்தில் உரிய பாடத்திட்டங்களை கொடுக்க முடியாதது கல்வி துறையின் தவறு தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

இதையும் படிங்க;- அன்னைக்கு பெருமை பொங்க பேசினீங்களே முதல்வரே! இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க!வெட்கக்கேடு!நாராயணன் திருப்பதி

தமிழகத்தில் குடி போதையினால் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற, ஏற்படப்போகிற ஆயிரக்கணக்கான கொலைகள், விபத்துகள் மற்றும் தற்கொலைகளினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? அதை ஒழிக்க மக்களிடம் கையெழுத்து கேட்க மாட்டர்களா? மற்ற மாநிலங்களில், பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் மது இல்லையா? வருவாய் இல்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், போதைக்கு அடிமையாகி பெற்றவர்களையே கொலை செய்யும் கொலை பாதகர்களை உருவாக்குகிற அளவிற்கு தமிழகத்தில் மதுவின் 'தரம்' உள்ளது என்பதை ஏற்க மறுப்பதும், அதை நியாயப்படுத்துவதும், விஞ்ஞான ரீதியாக அதை நிரூபிக்க முனைவதும் தான் விவகாரம். 

மற்ற மாநிலங்களில் பல நிறுவனங்களின் தரமான மது உள்ள போது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே, குறிப்பாக அரசியல் சார்புள்ள நிறுவனங்கள் மட்டுமே மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? மறைக்க முடியுமா? பணம், பணம் என பல ஆயிரக்கணக்கான கோடிகள் புரள்வதால் இந்த படுகொலைகளை கண்டும் காணாமல் இருப்பதா? மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக மதுக் கொலைகள், விபத்துகள், தற்கொலைகள் நிகழ்கின்றன என்பதை மறுக்க முடியுமா? இதற்கெல்லாம் காரணம் மது தயாரிப்பில், விற்பனையில், விற்பனைக்கு பின்னர் என்று எங்கும் ஊழல், எதிலும் ஊழல் கொடி கட்டிப்பறப்பது தான் என்றால் அதை மறுக்க முடியுமா? நாளையே மது விலக்கை அமல்படுத்தி விட முடியுமா? சாத்தியமா என்றெல்லாம் அறிக்கை விட்டு, சமாளிக்க முயற்சிப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள். . முடியவில்லையெனில், மற்ற மாநிலங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தயாரிக்க, விற்க அனுமதியளியுங்கள். அரசு விநியோகிப்பதை நிறுத்தி விட்டு தனியாரின் விற்பனை, தரம், கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதியாக கண்காணிக்கட்டும், கட்டுப்படுத்தட்டும். மது விலக்கு கொள்கையை படிப்படியாக கடைபிடிக்கட்டும். பெற்ற தாய், தந்தையரை பலிவாங்கும் இந்த மதுப் படுகொலைகளுக்கு விடிவு காலம் எப்போது? இது தான் திராவிட மாடலோ? என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

click me!