
நீண்ட நாட்கள் இழுபறிக்குப் பின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக அதிகாரப்பூர்மான தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதற்கான அறிவிப்பு விரையில் வரும் என தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2000 கோடி ரூபாய் செலவில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என கடந்த 2015-16ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, செங்கல்பட்டு, பெருந்துறை, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து அனுப்பினார். இதையடுத்து, இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். ஆனால், இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ் அமையப்போகிறது என்ற தகவலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்ய ஜூன் 14-ம் தேதி வரை மதுரை உயர்நீதிமன்ற கிளை கெடு விதித்திருந்தது. ஆனால், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இதனிடையே மதுரை மேலூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆணை தற்போது வந்திருப்பதாகவும், மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் பிறகு இழுபறியில் இருந்த இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தோப்பூரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், நான்கு வழிச்சாலை இணைப்பு, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரும் பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படுவதன் மூலம் கிட்டத்ததட்ட 15 மாவட்டங்களில் உள்ள 3 கோடி பேர் பயன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.