தமிழகத்தில் அதிமுக அலைதான் வீசுகிறது.. அதில் மற்றவர்கள் காணாமல் போவார்கள்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 15, 2021, 5:08 PM IST
Highlights

 பிரேமலதா விஜயகாந்த் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், யாரையும் நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனவும், தமிழ்நாட்டில் அதிமுக அலை தான் வீசுவதாகவும், இந்த அலையில் மற்றவர்கள் காணாமல் போவார்கள் என்றும் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா நல்லாசியோடு ராயபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இதுவரை 5 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார். 

1991ற்கு முன் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியாக ராயபுரம் இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினர் நிதியை 100% பயன்படுத்தியுள்ளதாகவும், ராயபுரம் ஒரு குட்டி இந்தியா, தமிழ்நாடு எனவும் குறிப்பிட்டார். சி ஏ.ஏ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும், ஆனால் எங்கள் கொள்கை அது அல்ல என்றும், அதிமுகவின் நிலைப்பாடு என்றுமே சி.ஏ.ஏவிற்கு எதிரானது தான் எனவும் கூறினார்.மேலும், பிரேமலதா விஜயகாந்த் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், யாரையும் நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனவும், தமிழ்நாட்டில் அதிமுக அலை தான் வீசுவதாகவும், இந்த அலையில் மற்றவர்கள் காணாமல் போவார்கள் என்றும் தெரிவித்தார். 

7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 7 பேர் விடுதலையில் திமுக நாடகமாடி வருவதாக குற்றம்சாட்டிய அவர், 7 பேர் விடுதலைக்காக என்றாவது திமுக சட்டம் இயற்றியுள்ளதா என்றும், 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும் திட்டவட்டமாக கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கை சமூகத்திற்கான திட்டங்கள் எனவும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிச்சயம் செய்வோம் என்றும், தேர்தல் காலத்தில் சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்யும் அரசு அதிமுக தான் என்றும், ஆனால் திமுக தேர்தல் அறிக்கை என்பது ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

click me!