திருப்பம் தருமா திருப்பத்தூர்.. திமுக முன்னாள் அமைச்சருக்கும், அதிமுக வேட்பாளருக்கும் கடும் போட்டி..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2021, 4:54 PM IST
Highlights

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு வெற்றி பெற்ற மாதவன்,ராஜகண்ணப்பன்,பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள்  வேட்பாளர்களை அறிவித்துவிட்டு சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  

இந்த சூழலில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு வெற்றி பெற்ற மாதவன்,ராஜகண்ணப்பன்,பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.  இந்த தொகுதியில் தற்போது முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், அமமுக தலைமை நிலையச் செயலர் உமாதேவன் என்று நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

இங்கு கடந்த தேர்தல்களில் 6 முறை போட்டியிட்டு அதில் 4 முறை வெற்றி பெற்றவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் மாதவன். அவர் திமுகவில் ஹாட்ரிக் முறையும், அதிமுகவில் ஒரு முறையும் வென்றார். இங்கு திமுக-அதிமுக விடையே நேரடி போட்டி 1977 பொதுத்தேர்தலில் தொடங்கியது. இதுவரை 9 முறை நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த மோதலில் 6 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வென்றுள்ளது.

கடந்த 3 தேர்தல்களில் அதிமுகவைத் தோற்கடித்து பெரியகருப்பன் ஹாட்ரிக்' வெற்றி பெற்று, 4வது முறையாக களத்தில் உள்ளார். தோல்விகளையே சந்தித்து வந்த அதிமுகவிற்கு புத்துணர்வு தரும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் போட்டியிடுகிறார். தொகுதியில் கடந்த ஓராண்டாக உற்சாகமான கட்சி பணி,தொண்டர்களுக்கு உதவி, மக்களுக்கு கொரோனா நிவாரணம், கட்சியில் முக்கியத்துவம் என்ற பலத்துடன் வலிமையான போட்டியாக களத்துக்கு வந்துள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தும், இந்தத் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்கள், பெரிய மாற்றங்கள் என எதையும் செய்யவில்லை திமுகவின் பெரியகருப்பன் என்கிற மிகப்பெரிய குறை பொதுமக்களிடத்தில் மட்டுமல்லாமல், அவரது சொந்தக் கட்சியினரிடம் அதிகம் இருப்பது பெரிய கருப்பனுக்கு பெரும் சறுக்கல். மேலும், கட்டப் பஞ்சாயத்துக்களும், மணல் கொள்ளையும் இவரது துணையுடன் நடைபெறுவதாக மக்களிடம் பேசுபொருளாக மாறி இருப்பது மேலும் இவருக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது மருது அழகுராஜிவிற்கு வாக்குப்பதிவில் கைகொடுக்கும் என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2001 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி கண்ட உமாதேவனும் அமமுக சார்பில் இம்முறை களத்தில் நின்றாலும் போட்டி என்னவோ அதிமுக- திமுக என்னும் இரு முனைப் போட்டியே, களத்தில் நேரடியாக இருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்தாலும் தொகுதியில் அதிமுகவின் வாக்குவங்கி சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!