
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திகேயன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து ஆதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
கோவில்பட்டியில் தூத்துக்குடி தொகுதி மக்களவை பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் முடிவில், அவரது முன்னிலையில் அதிமுகவில் வைகோவின் சகோதரி காஞ்சனாவின் மகன் கார்த்திகேயன் இணைந்தார். திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி பகுதியை பூர்வீகமாக கொண்ட வைகோவின் சகோதரி காஞ்சனா குடும்பத்தினர் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
கார்த்திகேயன் சென்னையில் உணவு விடுதி நடத்தி வருகிறார். அதிமுகவில் இணைந்தது குறித்து பேசிய அவர், ’’அதிமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது. முதலில் திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என வைகோ முழங்கி வந்தார். இப்போது அதனை மறந்து விட்டு இப்போது மீண்டும் திமுகவுடன் வைகோ கூட்டணி அமைத்துள்ளார்.
இந்தக் கூட்டணி மக்களுக்கு ஆபத்தானது. திமுகவுடன் கூட்டணி அமைத்ததால் மதிமுகவினர் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.