அதிமுகவால் காலியான ராஜ்ய சபா எம்பிக்கள்.. கிடுகிடுவென உயரப்போகும் திமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை!

By Asianet TamilFirst Published May 19, 2021, 9:36 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளையும் திமுகவே வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் மூன்று ராஜ்ய சபா எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. அதிமுக வசமாக இருந்த இந்த எம்.பி. பதவிகள் முகம்மது ஜான் மறைவாலும் வைத்தியலிங்கம் (ஒரத்தநாடு), கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி) ஆகியோர் எம்.எல்.ஏ.க்கள் ஆனதால் செய்த ராஜினமாலும் காலியானது. தற்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் உச்சத்தில் உள்ளதால், தேர்தல்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. கொரோனா தொற்று குறைந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தப்படலாம்.
காலியாக உள்ள இந்த மூன்று எம்.பி. பதவிகளில், கே.பி.முனுசாமி ராஜினாமா செய்த எம்.பி. பதவிக் காலம் 2026 ஏப்ரல் 2 வரையிலும்; மறைந்த முகம்மது ஜான் எம்.பி.யின் பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரையிலும்; ராஜினாமா செய்த வைத்தியலிங்கம் எம்.பி.யின் பதவிக்காலம் 2022 ஜூன் 29 வரையிலும் இருந்தது. இந்தக் காலி இடங்களின் பதவியின் காலம் முறையே 5 ஆண்டுகள், 4 ஆண்டுகள், ஓராண்டு என்ற வகையில் உள்ளன. தற்போதைய நிலையில், காலியாக உள்ள மூன்று எம்.பி. பதவிகளையும் திமுக கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம். மூன்று எம்.பி. பதவியின் காலம் வெவ்வேறு காலமாக உள்ளதால், அதற்கான இடைத்தேர்தல் நோட்டிபிகேஷன்கள் தனித்தனியாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
அப்படி வெவ்வேறு நோட்டிபிகேஷன்கள் வெளியிடப்பட்டால், சட்டப்பேரவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3 எம்.பி. பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம். திமுகவே மூன்று பதவிக்கும் ஆட்களை நிறுத்தும்பட்சத்தில், அக்கட்சிக்கே அனைத்துப் பதவிகளும் கிடைக்கும். தற்போது மாநிலங்களவையில் தமிழகத்திலிருந்து திமுகவின் பலம் 7 ஆக உள்ளது. அதிமுக 5, தமாகா, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 1 என்ற வகையில் உள்ளன. காலியாக உள்ள 3 எம்.பி. பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று, அவை திமுக கணக்கில் சேர்ந்தால், திமுகவின் பலம் 10 ஆக அதிகரிக்கும். இதன்மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் (34) கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாக திமுக நீடிக்கும்.
இடைத்தேர்தலுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக மாநிலங்களவையில் பாஜக (93), காங்கிரஸ் (34), திரிணாமூல் காங்கிரஸ் (11) ஆகிய கட்சிகளுக்குப் பிறகு திமுக 4-வது பெரிய கட்சியாக மாறும்.
 

click me!