திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க தயாரான அதிமுக.. பொங்கல் பரிசில் ரூ.500 கோடி ஊழல்.. நீதிமன்றம் படியேறிய அதிமுக!

By Asianet TamilFirst Published Jan 24, 2022, 8:14 PM IST
Highlights

21 மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டது. அதோடு, தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 1297 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகார் கூறியிருந்தார். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 1000 கோடி ரூபாய் ஊழல் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகைப் பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ரூ.1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 21 மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டது. அதோடு, தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தன. இதுகுறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளிக்கப்பட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை, விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!