சட்டப்பேரபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்ற வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டதால் அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.
தமிழக சட்டப்பேரவையில் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னதாக நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்த்கலைவர் விவகாரம் குறித்தும், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது குறித்தும் 10 முறை கடிதம் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக கூறினார். எங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், நடவடிக்கை எடுக்காததற்காக காரணம் தெரிய வேண்டும் என கோரினார்.
undefined
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, பேரவை விதிப்படி எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி மட்டுமே உள்ளது எனவும் இருக்கை விவகாரத்தில் மரபுபடியும் சட்டத்தின்படியும் தான் நடப்பதாக கூறினார். அதிமுகவில் இருந்து மூன்று பேர் நீக்கியதாக நீங்கள் கடிதம் கொடுத்திருக்கிறீர்கள், ஒருவர் எந்த சின்னத்தில் வென்றாரோ கடைசி வரை அவர் அந்த கட்சிதான் , சின்னத்திற்கு எதிராக வாக்களித்தால்தான் அவர்களை நீக்க முடியும் என கூறினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து மூன்று பேர் நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி நடைப்பெற்றது. தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகர் இருக்கையை அதிமுகவினர் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அவைக்காவலர்கள் அதிமுகவினரை வெளியேற்றும்படி உத்தரவிட்டதையடுத்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி அதிமுகவினர் அவையில் இருந்து வெளியே வந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உட்பட மூவரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி கடிதம் கொடுத்தும் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அருகில் தான் துணை தலைவர் அமர வேண்டும். அது தான் கால காலமாக நடந்து வருகிறது என கூறிய அவர், சபாநாயகர் தொடர்ந்து மரபை மீறி செயல்படுவதாக தெரிவித்தார்.