மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லைனா 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தரனும் -அப்பாவுவிற்க்கு அதிமுக வக்கீல் நோட்டீஸ்

By Ajmal KhanFirst Published Nov 23, 2023, 9:50 AM IST
Highlights

அதிமுகவை பற்றியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பற்றியும் அவதூறு பரப்பும் விதமாக பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது 48 மணி நேரத்தில் வருத்தம் தெரிவிக்கவில்லையென்றால் 10 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

அப்பாவுவின் கருத்திற்கு எதிர்ப்பு

அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாகவ பல பிரிவாக பிரந்தது. டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அதிமுக சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Latest Videos

  அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான, ஆர். எம். பாபு முருகவேல் அளித்துள்ள வழக்கறிஞர் நோட்டீஸில்,   சட்டப்பேரவை சபாநாயகர் பதவி என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நியாயமான, நடுநிலையான பதவியாக இருக்க வேண்டும் மாறாக, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் போல உங்களின் செயல்பாடுகள் இருக்கிறது அதிமுகவின் குரல்வளைகளை நசுக்குகின்ற விதமாக உங்களுடைய செயல்பாடு சட்டமன்றத்தில் இருக்கிறது. 

நற்பெயருக்கு கலங்கம்

குறிப்பாக துணை தலைவர் இருக்கை ஒதுக்கும் விஷயத்தில் கூட உங்களுடைய நடுநிலையான நிலைப்பாடு வெளிப்படவில்லை, காரணம் இல்லாத காரணங்களுக்கு கூட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதில் நீங்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள்.   இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது அது செய்தியாகவும் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது.

இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களின் மனதையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகின்ற விதமாகவும் அந்த பேச்சின் காணொளி அமைந்திருக்கிறது.

மனவேதனையும், மன உளைச்சலையும் கொடுத்திருக்கிறது

குறிப்பாக அந்தக் காணொளியில் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு இயக்கம் பிளவு பட்ட சூழ்நிலையில் தங்களை கழகத்தின் முக்கியமான நபர் யாரோ ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் அதை மறுத்ததாகவும் உள்ளது. இது ஒரு அப்பட்டமான பொய், சபாநாயகர் என்ற தங்களின் தகுதிக்கு ஒவ்வாத பேச்சு, இந்த பேச்சு சட்டமன்ற உறுப்பினர்களல்ல எங்களுடைய இயக்கத்தின் அடிமட்ட தொண்டன் கூட இது போன இழி செயலை செய்வதற்கு விரும்ப மாட்டான் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இது போன்ற தங்களின் பேச்சானது கழகத்திற்கும், கழகத்தின் உறுப்பினர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்களின் பேச்சு சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி மாநில செய்தியாக மட்டுமல்லாமல் அது ஒரு தேசிய அளவில் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது அது கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. தங்களின் பேச்சானது எனக்கும் எங்களின் கழக தொண்டர்களுக்கும் மிகுந்த மனவேதனையும், மன உளைச்சலையும் கொடுத்திருக்கிறது, தங்களின் பேச்சு ஒருபுறம் இருந்தாலும் சட்டமன்ற சபாநாயகர் என்ற அந்த வரம்பை மீறி உங்களுடைய பேச்சு அஇஅதிமுகவின் மீது உள்ள வன்மத்தையும் சட்டமன்ற சபாநாயகர் என்ற பொது வெளியில் இருந்து வந்து திமுகவின் பிரதிநிதியாக உங்களின் பேச்சு விளங்குகிறது.

கட்சி சார்பற்று இருக்க வேண்டிய நீங்கள், கட்சி சார்பற்று நடக்க வேண்டிய நீங்கள் திமுகவின் செய்தி தொடர்பாளர் போல உங்களின் பேச்சு அமைந்திருப்பது உண்மையில் வேதனையும் வருத்தத்தையும் தருகிறது. ஒரு சபாநாயகர் என்பவர் கட்சி பேதமற்ற நடுநிலையாளராக விளங்க வேண்டியது தான் மரபு, ஆனால் அதை மறந்து அரசியல் எதிரிகளின் மனதை புண்படுத்துகிற விதமாக ஆளும் தரப்பின் பிரதிநிதியாக அதிகார துஷ்பிரயோகத்தோடு, மனம் சஞ்சலப்படுகிற விதமாக பேசியிருக்கிற உங்களின் பேச்சு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மான நஷ்ட பழக்கு கொடுப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு

எனவே தங்களின் இந்த பேச்சுக்கு பொது வெளியில் 48 மணி நேரத்திற்குள்ளாக வருத்தம் தெரிவித்து தங்களின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும்,  இந்த மன உளைச்சலுக்கும் தங்களின் பேச்சுக்கு மான நஷ்ட ஈடாக ரூ 10 கோடி வழங்க வேண்டும் என்றும், தவறினால் உங்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுப்பதற்கு உண்டான முகாந்திரம் இருப்பதாக கருதி உரிய நீதிமன்றங்களில் அதற்கு உண்டான முன்னெடுப்பு எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர தயாராக இருந்தனர்.? ஸ்டாலின் சொன்ன பதில்- அப்பாவு பரபரப்பு தகவல்

s

click me!