
பாஜகவிடம் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே ஒற்றை தலைமை என்ற நாடகத்தை அதிமுக அரங்கேற்றுவதாக திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூரில் நடைபெற்றது. அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் லியோனி;- அதிமுக இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளும் மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தலைமைக்கு என்று போட்டி வருகிறதோ அன்று அந்த இயக்கம் தரைமட்டமாகும் என அண்ணா கூறினார்.
அதுபோன்று அதிமுகவில் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய தலைமை போட்டியால் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். பாஜக மக்களை தங்கள் மீது திசை திருப்ப முயல்கிறது. அண்ணாமலை அதற்காகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதற்காகவே என்னென்னமோ பேசி வருகிறார். பாஜகவிடம் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே ஒற்றை தலைமை என்ற நாடகத்தை அதிமுக அரங்கேற்றுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போன்றவர். அத்தகைய ஆட்டை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். ஒருநாள் அந்த ஆட்டுக்கு மாலை அணிவித்து பலி கொடுப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்வார்கள் என்றார்.