அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் திடீர் விசிட்.. கூடவே வந்த செம்மலை.. கண்டுகொள்ளாத அமைச்சர்கள்..!

By Selva KathirFirst Published Sep 22, 2020, 10:40 AM IST
Highlights

வரும் 28ந் தேதி அதிமுக செயற்குழு கூட உள்ள நிலையில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

வரும் 28ந் தேதி அதிமுக செயற்குழு கூட உள்ள நிலையில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர், பொதுச் செயலாளர் பதவி போன்ற விவகாரங்களில் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. தேர்தல் நெருங்கி வருகிறது, சசிகலா விடுதலையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிமுகவில் அதிகாரக்குழப்பம் நிலவுவது மூத்த நிர்வாகிகளை மட்டும் அல்ல தொண்டர்களையும் கூட கவலை அடைய வைத்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிக உறுதியாக இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் தரப்போ, தங்களுக்கு பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தால் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்க முடியும் என்று பிடிவாதம் காட்டிக் கொண்டிருக்கிறது. 

இதனால் அதிமுகவில் சலசலப்பு அதிகமாகியுள்ளது. எனவே அதிமுகவில் பொதுக்குழுவிற்கு பிறகு அதிகாரமிக்க செயற்குழு கூட்டப்பட்டுள்ளது. வரும் திங்களன்று அதிமுக செயற்குழு கூட உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், பொதுச் செயலாளர் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக செயற்குழு உறுப்பினர்களார் சுமார் 200 பேர் வரை இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த 200 பேரில் பெரும்பாலானவர்கள் ஏற்கும் தீர்மானங்களை தான் பொதுக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும். எனவே செயற்குழு உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர் வேட்பாளராகவோ, பொதுச் செயலாளராகவோ தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சூழலில் தான் நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திடீரென ஓபிஎஸ் வருகை தந்தார். அவருடன் வேறு முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. ஆனால் மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை ஓபிஎஸ் உடன் வந்திருந்தார். செம்மலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்தவர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா அணியில் இருந்து விலகி ஓபிஎஸ் அணிக்கு வந்தவர். அவர் மட்டுமே ஓபிஎஸ்சுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் ஓபிஎஸ்சை சந்திக்க அமைச்சர்கள் சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அமைச்சர்கள் யாரும் வரவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியதாக சொல்கிறார்கள். அதாவது செயற்குழு கூட்டம் எதற்கு, கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்த கடிதம் வழக்கம் போல் ஓபிஎஸ் – இபிஎஸ் சார்பில் எழுதப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை. அதே சமயம் செயற்குழு உறுப்பினர்களின் விவரங்களை முழுவதுமாக தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்று இந்த கடிதத்தை ஓபிஎஸ் எழுதியதாக சொல்கிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழு விஷயத்தில் ஓபிஎஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாக்களில் பங்கேற்க ராமநாதபுரம் சென்றுள்ளார். அவர் இங்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் திடீரென அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செம்மலையுடன் வந்தது மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியது அதிமுகவில் சலசலப்பை அதிகமாக்கியுள்ளது.

click me!